தாய் சாலட் ரோல்


தாய் சாலட் ரோல்
x
தினத்தந்தி 10 Sept 2023 7:00 AM IST (Updated: 10 Sept 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

சுவையான தாய் சாலட் ரோலின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

தாய் சாலட் ரோல்

தேவையான பொருட்கள்:

வால்நட் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்

ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1

மாங்காய் சாஸ் - ¼ கப்

ஸ்வீட் சில்லி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்

சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

அரிசி நூடுல்ஸ் - 1 கப்

அரிசி தாள் - 8

பீன்ஸ் - 1 கப்

கேரட் (துருவியது) - 1 கப்

புதினா மற்றும் கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 கைப்பிடி

செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் வால்நட்டை போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அடிகனமான மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 10 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் மாங்காய் சாஸ், 2 டேபிள் ஸ்பூன் ஸ்வீட் சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து மேலும் 2 நிமிடங்களுக்கு வதக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் வறுத்த வால்நட்ஸை சேர்த்து கலக்கவும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அது கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரிசி நூடுல்ஸை போட்டு அடுப்பை அணைக்கவும். இதை 5 முதல் 7 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். பின்பு அந்த சூடான தண்ணீரை நன்றாக வடித்து, அதில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி அலசவும். பின்னர் அந்த தண்ணீரையும் முழுவதுமாக வடிகட்டவும். நூடுல்ஸுடன் மீதமுள்ள ஸ்வீட் சில்லி சாஸை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இப்போது, ரோல் செய்வதற்கு தேவையான அரிசி தாளை தனித்தனியாக பிரித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் அரிசி தாள்களைப் போட்டு, 15 முதல் 30 வினாடிகள் வரை மூழ்கியிருக்குமாறு வைத்த பின்பு அவற்றை வெளியே எடுக்கவும். இந்த தாள்களை ஒவ்வொன்றாக கட்டிங் போர்டில் சுருக்கம் இல்லாமல் பரப்பவும். தாளின் மையப்பகுதியில், ஒரு டேபிள் ஸ்பூன் நூடுல்ஸ் கலவையை வைக்கவும். அதன் மேல், 2 டேபிள் ஸ்பூன் வால்நட் வெங்காய கலவை, ஒரு டேபிள் ஸ்பூன் பீன்ஸ், கேரட் கலவையை வைத்து, புதினா மற்றும் கொத்தமல்லித்தழையை தூவவும். இப்போது அரிசி தாளை மெதுவாக சுருட்டவும். அதை நன்றாக அழுத்தினால் உருளை வடிவில் மாறும். இதை தயாரித்த உடனே பரிமாறவும்.


Next Story