கேரள ஸ்பெஷல் 'இதழ் அப்பம்'


கேரள ஸ்பெஷல் இதழ் அப்பம்
x
தினத்தந்தி 4 Sept 2022 7:00 AM IST (Updated: 4 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

3 முதல் 4 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் மாவு வெந்திருக்கும். அதன் மேல் சிறிதளவு நெய்யை முழுவதுமாக தடவவும். இப்போது ஒரு கரண்டி மாவை ஏற்கனவே வெந்திருக்கும் மாவின் மீது ஊற்றி மூடி வைக்கவும்.

கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற காலை உணவாக இருப்பது 'இதழ் அப்பம்'. நமது ஊர் இட்லியைப் போலவே ஆவியில் வேகவைத்து எடுப்பது இதன் சிறப்பு. 'வெள்ளை வெளேர்' என்று மிருதுவாக இருக்கும் இதழ் அப்பத்தை, கோழிக்கறி குழம்பு அல்லது ஆட்டுக்கறி குழம்புடன் சேர்த்து சாப்பிட்டால் தனி ருசியாக இருக்கும். அதன் செய்முறையை இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - 1 ½ கப்

தேங்காய் - 1

வடித்த அரிசி சோறு - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சீரக சம்பா அரிசியை நன்றாகக் கழுவிய பின்பு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும். தேங்காயை அரைத்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது மிக்சி ஜாரில் சீரக சம்பா அரிசி, வடித்த சாதம், தேங்காய்ப்பால், தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அந்த மாவை தோசை மாவு பதத்தைவிட சற்று நீர்ப்பாக வரும் அளவுக்கு, தேங்காய்ப்பால் ஊற்றி கலந்துகொள்ளவும்.

இட்லி வேகவைப்பது போல, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேகவைப்பதற்கான ஸ்டாண்டை வைத்து, அதன் மேல் சற்று குழிவான தட்டை வைக்கவும். தட்டின் உள்பகுதியில் சிறிதளவு நெய் தடவவும். பின்பு அதில் ஒரு கரண்டி மாவு ஊற்றி பாத்திரத்தை மூடவும்.

3 முதல் 4 நிமிடங்கள் கழித்துத் திறந்தால் மாவு வெந்திருக்கும். அதன் மேல் சிறிதளவு நெய்யை முழுவதுமாக தடவவும். இப்போது ஒரு கரண்டி மாவை ஏற்கனவே வெந்திருக்கும் மாவின் மீது ஊற்றி மூடி வைக்கவும். அது வெந்தவுடன் அதன் மேல் நெய்யைத் தடவி மீண்டும் ஒரு கரண்டி மாவு ஊற்றவும். இவ்வாறு தொடர்ச்சியாக, ஒவ்வொரு அடுக்காக தட்டு நிரம்பும் வரை மாவை ஊற்றி வேக வைக்கவும். கடைசியாக மிதமான தீயில் மேலும்

10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

ஆறிய பிறகு தட்டின் ஓரங்களை நெய் தடவிய கத்தியைக் கொண்டு தளர்த்தி, அகலமான தட்டின் மீது தலைகீழாக கவிழ்த்து வைத்தால், இதழ் அப்பம் பாத்திரத்தில் இருந்து எளிதாக வரும். பின்பு இதனை ஒவ்வொரு இதழாகப் பிரித்து எடுக்கலாம்.


Next Story