நோய்களை நீக்கும் நெல்லிக்காய் ரெசிபிகள்


நோய்களை நீக்கும் நெல்லிக்காய் ரெசிபிகள்
x
தினத்தந்தி 18 Dec 2022 7:00 AM IST (Updated: 18 Dec 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

சுவையான நெல்லிக்காய் சட்னி, லவுஞ்சி, பொரியல் தயாரிப்பது குறித்து பார்ப்போம்.

நெல்லிக்காய் சட்னி:

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 10

கொத்தமல்லித் தழை - 1 கப்

கறிவேப்பிலை - ¼ கப்

பச்சை மிளகாய் - 7

இஞ்சி - சிறு துண்டு

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தேங்காய் - சிறு துண்டு

கடுகு - ½ டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும். பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும். கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும். கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும். இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் சட்னி' தயார்.

நெல்லிக்காய் லவுஞ்சி:

(வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் காரம், இனிப்பு, உவர்ப்பு சுவை கலந்த சட்னி)

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 10

கடுகு - ½ டீஸ்பூன்

கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

சோம்பு - ½ டீஸ்பூன்

வெந்தயம் - ½ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

கருப்பு உப்பு - தேவைக்கு

சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து முழுதாக இட்லி வேக வைப்பது போல 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். ஆறியதும் கொட்டைகள் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம், கருஞ்சீரகம், சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு நன்றாக பொரிய வைக்கவும். பின்பு நெல்லிக்காயைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கருப்பு உப்பு போட்டு நன்றாகக் கிளறவும். பின்னர் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறவும். கலவை குழையாமல் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.

இப்போது நெல்லிக்காய் லவுஞ்சி தயார்.


நெல்லிக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 10

கடுகு - ½ டீஸ்பூன்

சீரகம் - ½ டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்

பெருங்காயப் பொடி - ¼ டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன் (நசுக்கியது)

சோம்பு - ¼ டீஸ்பூன் (நசுக்கியது)

கொத்தமல்லித் தழை - 2 டீஸ்பூன்

வெல்லம் - 1 டீஸ்பூன்

சமையல் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் நறுக்கிய நெல்லிக்காயைக் கொட்டி 3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி, தனியா, சோம்பு, உப்பு கலந்து வதக்கவும். இந்தக் கலவையில் வெல்லம் கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கிளறவும். பின்னர் மிதமான தீயில் 4 நிமிடங்கள் வேக வைக்கவும். தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.


Next Story