போபா டீ
சுவையான போபா டீ, போபா ஸ்ட்ராபெர்ரி மில்க் டீ ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
போபா டீ
தைவானில் 1980-களில் டீக்கடை நடத்தி வந்தவரின் மனதில் டீயை சூடாகத் தான் குடிக்க வேண்டுமா, குளிர்ந்த டீயின் ருசி எப்படி இருக்கும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் அவரும் கடையில் பணியாற்றுபவரும் இணைந்து உருவாக்கியது தான் இந்த 'போபா டீ'. ஆரம்ப காலத்தில் பப்புள் டீ, முத்து டீ, டாபியோகா போன்ற பல பெயர்கள் இதற்கு இருந்தாலும் நாளடைவில் அது போபா என்ற பெயரிலேயே பலராலும் அழைக்கப்படுகிறது. குளிர்ந்த டீயை விரும்பும் டீ பிரியர்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய டீ இது. இதன் தயாரிப்பை இந்த தொகுப்பில் காணலாம்.
போபா முத்து
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு மாவு - 120 கிராம்
நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை, 6 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து, சர்க்கரை கரைந்து தண்ணீர் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து வடிகட்டிக்கொள்ளவும். வடிகட்டிய நீரை மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். பின்பு மரவள்ளிக்கிழங்கு மாவை சிறிது சிறிதாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, சற்று சூடு தணிந்ததும் சப்பாத்தி மாவு பதத்தில் மாவை பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சுண்டைக்காய் அளவு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் நீர் ஊற்றி நன்கு கொதிக்கும்போது உருட்டிய உருண்டைகளை சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் அடுப்பை அணைத்து 20 நிமிடங்கள் அப்படியே வேகவைத்த தண்ணீரில் ஊற விடவும். பின்னர் உருண்டைகளை தனியாக வடிகட்டிக்கொள்ளவும். இதனுடன் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை, 2 மேசைக் கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இது பார்ப்பதற்கு கருமை நிற மாதுளை முத்துக்கள் போன்று காட்சியளிக்கும். போபா முத்துக்கள் தயார்.
இந்த போபா முத்துக்களை வைத்து 200 வகையான டீக்கள் தயார் செய்யலாம்.
போபா ஸ்ட்ராபெர்ரி மில்க் டீ
5 ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்கு கழுவி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது ஸ்ட்ராபெர்ரி ஐஸ் கிரீம் சேர்த்து, மீண்டும் லேசாக அரைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளரில் சிறிது போபா முத்துக்கள், ஸ்ட்ராபெர்ரி கலவை மற்றும் சிறிது குளிர்ந்த பால் சேர்க்கவும். சுவையான போபா ஸ்ட்ராபெர்ரி மில்க் டீ தயார்.