ஸ்டெபிலைஸர் பயன்பாடும், அவசியமும்
ஸ்டெபிலைஸர் இல்லாதபோது மின்னழுத்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடும். இது வயரிங்கையும் பாதிக்கும். உற்பத்தித்திறன் குறைவதற்கும் வழிவகுக்கும்.
மின்சாரமும், மின்சாதனங்களும் அன்றாட வாழ்க்கை முறையில் அவசியமானவை. வீட்டு வேலைகளை எளிதில் முடிப்பதற்காக பெண்கள் பலரும் மின்சாதனப் பொருட்களையே சார்ந்துள்ளனர். இவை நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது. எனினும், மின்சாதனங்களை கவனமாகக் கையாள்வது அவசியம்.
மின்சாதனங்கள் தொடர்பான பிரச்சினைகளில் முக்கியமானது மின்னழுத்த ஏற்ற இறக்கம். இதனைக் கட்டுப்படுத்தவே 'மின்னழுத்த நிலைப்படுத்தி எனும் ஸ்டெபிலைஸர்' பயன்படுகிறது. மின்சாதனங்களை உபயோகிக்கும் அனைத்து பெண்களும் இதுபற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
அனைத்து மின் சாதனங்களும் அவற்றின் சிறப்பான செயல் திறனுக்காக, குறிப்பிட்ட மின் அழுத்தத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த மின்னழுத்தத்தில், நிலையான மற்றும் பாதுகாப்பான மின்சாரத்தை மின் சாதனங்களுக்கு வழங்கும் கருவிதான் ஸ்டெபிலைஸர்.
தற்போது தயாரிக்கப்படும் ஸ்டெபிலைஸர்களில் பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக மின்சாரம் பாயும்போது மின்சாதனங்களை பாதுகாப்பதற்காக, தானாகவே அணையும் ஸ்டெபிலைஸர்களும் உள்ளன.
மின் சாதனங்களுக்கு ஏற்ற சரியான ஸ்டெபிலைஸர் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. இதற்கு மின் சாதனத்தின் வாட் தேவையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இது பவர் சாக்கெட்டுக்கு அருகில் உள்ள விவரக்குறிப்பு ஸ்டிக்கர் அல்லது பயனர் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் தேவையை விட 20 முதல் 25 சதவீதம் அதிக திறன் கொண்ட ஸ்டெபிலைஸர் வாங்குவது நல்லது.
ஸ்டெபிலைஸர் பயன்படுத்துவதன் மூலம் வீட்டில் ஏற்படும் மின் அழுத்த ஏற்ற இறக்கத்தால் மின் சாதனங்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம். வீட்டு உபயோகப் பொருட்களான ஏ.சி., டி.வி., குளிர்சாதனப்பெட்டி போன்ற மின்சாதனங்களின் செயல்பாட்டிற்கு தேவையான மின்சக்தியைப் பெறுவதை ஸ்டெபிலைஸர் உறுதி செய்கிறது.
சீரான மின்சாரத்தை வழங்குவதன் மூலம் வீட்டில் உள்ள அனைத்து மின்னணுப் பொருட்களின் நீண்ட ஆயுளுக்கு வழிவகை செய்கிறது.
ஸ்டெபிலைஸர் இல்லாதபோது மின்னழுத்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடும். இது வயரிங்கையும் பாதிக்கும். உற்பத்தித்திறன் குறைவதற்கும் வழிவகுக்கும்.
ஸ்டெபிலைஸர் பயன்படுத்துவதால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு, மின்சாதனங்கள் தீப்பிடிப்பது, வெடிப்பது போன்ற விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
மின் சாதனங்களுக்கு ஸ்டெபிலைஸர் உபயோகிப்பதால் மின்சாரப் பயன்பாடு சீராக இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணமும் கணிசமாகக் குறையும்.
மின்னணு சாதனங்களின் மொத்த சக்தி மதிப்பீடுகளை கருத்தில் கொண்டு, மின்நுகர்வின் அடிப்படையில் ஸ்டெபிலைஸர் தேர்வு செய்வது நல்லது.