பாரம்பரிய கலைகளின் புகழ் பரப்பும் சந்தியா


தினத்தந்தி 6 Jun 2022 11:00 AM IST (Updated: 6 Jun 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

கலைகளை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் பிறருக்கு உதவும் வகையில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாக, அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறேன்.

பாரம்பரியக் கலைகள் மீது கொண்ட ஆர்வம் மற்றும் ஈடுபாடு காரணமாக, தந்தையின் வழிகாட்டுதலோடு சிலம்பம், பரதம், பறை போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த சந்தியா. மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்ற இவர், பாரம்பரியக் கலைகளின் புகழைப் பரப்பும் முயற்சியாக, பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளித்து வருகிறார். அவரது பேட்டி.

"எனது தந்தை கார்த்திக் ரகுநாத், பாரம்பரியக் கலைகள் மீது ஈடுபாடு கொண்டவர். சிறுவயதில் இருந்தே, அவர் பயிற்சி செய்வதைப் பார்த்து வளர்ந்த எனக்குள் கலைகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. சிலம்பக்கலையில் தந்தைதான் என்னுடைய குரு. சிறுவயது முதல் அவரிடம் சிலம்பம் கற்று வருகிறேன்.

பாரம்பரியக் கலை என்பதையும் தாண்டி, பல்வேறு கலைகள் தோன்றுவதற்கு அடித்தளமானது சிலம்பக் கலை. இது சிறந்த தற்காப்புக் கலை ஆகும். பெண்கள் சிலம்பக் கலையை கற்றுக்கொள்வது அவர்களின் பாதுகாப்புக்கு உதவும்.

நான் சிலம்பம் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது 'பெண் குழந்தைகளுக்கு இவையெல்லாம் தேவையா?' என்று பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் அது எல்லாவற்றையும் தாண்டி என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்து, ஒவ்வொரு கலையையும் கற்றுக்கொள்ள உதவினர்.

சிலம்பப் போட்டிகள் எங்கு நடந்தாலும், என் தந்தை தயங்காமல் என்னை அழைத்துச் செல்வார். 'வெற்றி-தோல்வி என்பதைத் தாண்டி, அனுபவத்தைப் பெறுவதற்காக போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும்' என்பார். அவ்வாறு ஒவ்வொரு போட்டியாக வெற்றி பெற்று, மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் பல பரிசுகளை வென்று முன்னேறினேன். 2017-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றேன்.

சிலம்பக் கலையில் இருந்துதான் பரதம் தோன்றியதாகக் கூறுவார்கள். ஆகையால் பரதக் கலையையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போது பரதக் கலையில் முதுகலை இறுதியாண்டு படித்து வருகிறேன். சிலம்பம்-பரதக்கலை தொடர்புடைய ஆய்வில் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு.

கலைகளை கற்றுக் கொண்டதோடு நிற்காமல் பிறருக்கு உதவும் வகையில் அதைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாக, அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவி

களுக்கு இலவசமாக சிலம்பப் பயிற்சி அளித்து வருகிறேன். காதுகேளாதோர் தொழில்துறை பயிற்சி மாணவர்களுக்கும் சிலம்ப வகுப்புகள் எடுத்து வருகிறேன்.

ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது, அதனோடு தொடர்புடைய மற்றொன்றையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஆர்வம் இயல்பாக எல்லோருக்கும் தோன்றும். அவ்வாறுதான் எனக்கும், பறையிசை கற்றுக்கொள்வதில் விருப்பம் ஏற்பட்டது.

பறை மற்றும் சிலம்பாட்டம் மூலம் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்று கல்வி, மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதுமட்டுமின்றி அரசு விழிப்புணர்வு நிகழ்வுகளிலும், கலைநிகழ்ச்சி

களிலும் பங்கேற்றிருக்கிறேன்.

வருங்காலத்தில் சிலம்பம், பரதம் இரண்டையும் ஆடி கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்று பயிற்சி எடுத்து வருகிறேன். சிலம்பம், பரதம், பறை மட்டுமில்லாமல் கராத்தே, பாக்சிங் போன்றவற்றையும் கற்று, மற்றவர்களுக்கும் கற்றுத் தர வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.

நாட்டுப்புறக் கலைகளை கற்றுக்கொள்வதற்காக கல்லூரிகளில் பாடப்பிரிவுகள் இருப்பதையும், இந்தக் கல்வியில் தற்போது பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்ப் பாரம்பரியக் கலைகளை எல்லா மக்களும் எளிதில் கற்க வேண்டும் என்பதற்காக மாவட்ட இசைப்பள்ளி, கலைக் கல்லூரிகள் போன்றவை அரசால் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது விளையாட்டுத் துறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் சிலம்பக்கலையையும் சேர்த்துள்ளனர். இவ்வாறு வருங்காலத்தில் பாரம்பரிய தமிழ்க் கலைகள் அனைத்திற்குமே பல வாய்ப்புகளும் கிடைக்கச் செய்யும்பொழுது, கலைகளை மாணவர்களுக்கு எளிமையாகக் கொண்டு சேர்க்க முடியும்.

கலைகள் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்விக்கும் மிகப்பெரிய கருவி. வாழ்நாள் முழுவதும் கலைசார்ந்த பல முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது என்னுடைய வாழ்க்கை லட்சியம்" என்கிறார் சந்தியா.


Next Story