தன்னம்பிக்கை தந்த தையல் தொழில்
புதிய தொழில்நுட்பமான கம்ப்யூட்டரில் அளவு எடுத்து தைக்கும் முறையைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தினேன். தொழிலை மேலும் விரிவாக்கி நான்கு பவர்மெஷின்கள் வாங்கினேன். இப்போது என் கடையில் ஆரி ஒர்க், மெஷின் எம்பிராய்டரி, சுடிதார் மற்றும் லெகங்கா தயாரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறோம்.
'கைத்தொழில் கை விடாது' என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் திண்டுக்கல்லில் வசிக்கும் மஞ்சு. சுய வருமானம் தேவை என்ற உந்துதலில் தையல் தொழிலைக் கற்று, அதன் மூலம் முன்னேறியுள்ள தனது அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
''நான் பிறந்து வளர்ந்தது ஈரோட்டில். பள்ளிப் படிப்பு வரை மட்டுமே முடித்திருக்கிறேன். எனக்கு சிறுவயதில் ஓவியம் வரைவதிலும், கதைப் புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் இருந்தது.
திருமணம் ஆகும்வரை வேறு எந்தத் தனித்திறனையும் வளர்த்துக்கொள்ளவில்லை. திருமணம் முடித்து திண்டுக்கல் வந்தபிறகு, கணவரின் புகைப்படம் மற்றும் வீடியோ கவரேஜ் தொழிலில் அவருக்கு உதவியாக இருந்தேன். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.
அந்த சமயத்தில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக என்னுடைய வருமானம் தேவையாக இருந்தது. ஆகையால் தையல் கற்றுக் கொண்டேன். அதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பதினைந்தே நாட்களில் ரவிக்கை தைத்துப் பழகினேன். அப்பொழுதே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தைத்துக்கொடுக்க ஆரம்பித்தேன். வருமானத்தை விட வாடிக்கையாளரின் திருப்தியே பெரிதென உழைத்தேன்.
சிறிய கை வேலைகளைக்கூட சிரமம் பார்க்காமல் நானே செய்தேன். பத்து வருடங்கள் தொடர்ந்து வீட்டிலேயே தைத்துக் கொடுத்து, சுற்றுவட்டாரத்தில் அனைவருக்கும் தெரியத் தொடங்கினேன்.
இவ்வாறு வளர்ந்து வந்த நிலையில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டேன். ஆனாலும் என் தையல் தொழிலின் மீது நம்பிக்கை வைத்தேன். தொடக்கக் கூட்டுறவு வங்கியை அணுகி, சிறு தொழிலில் கடன் பெற்று, தனியாகக் கடை வைத்து தொழிலை விரிவுபடுத்தினேன். என்னைப் போலவே வறுமையில் வாடிய சில பெண்களுக்கு வேலை கொடுத்தேன்.
புதிய தொழில்நுட்பமான கம்ப்யூட்டரில் அளவு எடுத்து தைக்கும் முறையைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தினேன். தொழிலை மேலும் விரிவாக்கி நான்கு பவர்மெஷின்கள் வாங்கினேன். இப்போது என் கடையில் ஆரி ஒர்க், மெஷின் எம்பிராய்டரி, சுடிதார் மற்றும் லெகங்கா தயாரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறோம்.
செய்யும் காரியத்தில் வெற்றி பெற தன்னம்பிக்கையும், தேடலும்தான் முக்கியம் என்பதை உணர்ந்து பயணம் செய்கிறேன்.
இன்றைய சூழலில் பெண்கள் அனைவருக்கும் சுய வருமானம் அவசியமானது. இத்தொழில் என் குடும்பத் தேவைகளுக்கும், பிள்ளைகளின் படிப்பிற்கும் துணையாக இருந்தது. வாழ்வின் மீது நம்பிக்கையைத் தந்தது. இப்போது எனது இரண்டு பிள்ளைகளும் பொறியாளர்களாக பெங்களூருவில் இருக்கிறார்கள். கணவர் என் தொழிலுக்கு உற்சாகமூட்டித் துணை புரிகிறார்" என்று பெருமையுடன் கூறினார் மஞ்சு.