கலை என்றும் கைவிடாது- அருணா பார்த்தசாரதி


கலை என்றும் கைவிடாது- அருணா பார்த்தசாரதி
x
தினத்தந்தி 21 Aug 2022 7:00 AM IST (Updated: 21 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையே இல்லை. ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கு அது அடிப்படையான ஒன்று. குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து, மீட்கப்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு 2004-ம் ஆண்டு கிடைத்தது.

லைகளில் ஆர்வம் கொண்டவர் அருணா பார்த்தசாரதி என்பதை, அவரது வீட்டிற்குள் நுழையும்போதே தெரிந்து கொள்ளலாம். காணும் இடமெல்லாம் எழில்மிகு ஓவியங்கள், வேலைப்பாடுகள் மிகுந்த கலைப் பொருட்கள் என காட்சி அளிக்கின்றன. விழுப்புரத்தில் பிறந்த இவர், தற்போது வசித்து வருவது கோவையில். கைவினை கலையைக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடன் இருக்கும் அவரை சந்தித்துப் பேசினோம்...

கலையின் மீது ஆர்வம் வந்தது எப்படி?

கோலம் போடுவதில் இருந்து இந்த ஆர்வம் தொடங்கியது என்று சொல்லலாம். வண்ணக்கோலங்கள் வரையும்போது நிறங்களைச் சரியாகத் தீட்டுவது முக்கியம். நான் வரைந்த கோலங்களுக்குக் கிடைத்த பாராட்டு, கலைகளில் ஈடுபடுவதற்கு என்னைத் தூண்டியது. இருப்பினும், திருமணமான பிறகுதான் தீவிரமாக இதில் ஈடுபட்டேன். முறையான பயிற்சிகள் எடுத்தேன். சான்றிதழ்கள் பெற்றேன். அதன் பிறகே செயல்பட ஆரம்பித்தேன்.

மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றி சொல்லுங்கள்?

எனது தோழியின் மகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுத்தேன். குறைந்த காலத்திலேயே திறமையாக அவள் கற்று வந்தாள். 'யாரிடம் பயிற்சி பெறுகிறாய்?' என்று அவள் படிக்கும் தனியார் பள்ளியில் கேட்க, அவள் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறாள். அதன்மூலம் அந்தப் பள்ளியிலேயே பகுதி நேர ஓவிய ஆசிரியையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 3 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தேன்.

மாணவர்கள் ஆர்வமாக கற்றுக் கொண்டதால், அவர்களின் தேவையறிந்து என் பயிற்சி முறைகளில் பல மாற்றங்களைச் செய்தேன். அடுத்த கட்டமாக உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கு, கரப்பான் பூச்சி போன்றவற்றை எளிமையாக வரைவது எப்படி என்று பயிற்றுவித்தேன். தேர்வின்போது அது மிகப்பெரிய உதவியாக இருந்ததாக அவர்கள் சொன்னார்கள்.

பயிற்சி அளித்ததில் மறக்க முடியாதது?

குழந்தைகளின் கற்பனைக்கு எல்லையே இல்லை. ஓவியம் உள்ளிட்ட கலைகளுக்கு அது அடிப்படையான ஒன்று. குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து, மீட்கப்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு 2004-ம் ஆண்டு கிடைத்தது.

கோவை அருகே உள்ள பேரூரில்தான் வகுப்புகள் நடக்கும். கைவினை மட்டுமில்லாமல், மற்ற பாட வகுப்புகளும் நடந்தன. அந்தக் குழந்தைகளின் மனதை இயல்பு நிலைக்குத் திருப்பவும், அவர்களிடம் இருந்த கற்பனைத் திறனை வெளிக்கொணரவும் கலைக்கல்வி துணை புரிந்தது. அவர்களுக்குக் கற்பித்த காலகட்டம் எனக்கு பெரிய மனநிறைவைத் தந்தது.

கற்றுக்கொடுப்பது வீட்டில் தொடர்ந்ததா?

வெளியில் சென்று நான் மேற்கொண்ட அனைத்துமே பகுதிநேர பணிகள்தான். வீட்டில் தினமும் பயிற்சி வகுப்புகள் நடத்தினேன். அதன் பின்னர் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தனியார் பள்ளிகளில் பணியாற்றியதை விட, இங்கு பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது.

குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தபடி வரும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, இதுபோன்ற வகுப்புகள் மனதுக்கு அமைதியைத் தந்தது. இருப்பினும் தொலைவு காரணமாக, அந்தப் பணியைத் தொடர முடியாதது வருத்தமாக இருக்கிறது.

கலைப் பொருட்கள் விற்பனையை எப்போது தொடங்கினீர்கள்?

கற்றுக்கொடுக்கும் காலகட்டங்களிலேயே விற்பனையைத் தொடங்கி விட்டேன். ஆயில் பெயிண்டிங், கிளாஸ் பெயிண்டிங் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கும். 'எவர் கிரீன்' என்றால் தஞ்சாவூர் ஓவியங்கள்தான். மரபு வழி முறைகளைப் பின்பற்றி வரையும் ஓவியத்தோடு, நமது கற்பனையும் கலக்கும்போது, அது புதிதாக ஒரு வடிவம் பெறும் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

சமீபத்தில் திருப்திகரமாக அமைந்த வேலை?

பூஜை அறை வடிவமைப்பைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இது சற்றே வேலைப்பளு நிறைந்தது. கற்பனைக்கு சவாலானது. வாடிக்கையாளரின் கற்பனையும், நமது கற்பனையும் ஒன்று சேரும் புள்ளி திருப்திகரமாக இருந்தால்தான், கிடைக்கின்ற வடிவமைப்பு மனநிறைவைத் தரும்.

அந்த வகையில் திரைத்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு, மலை மேல் நிற்கும் முருகன் அமைப்பு கொண்ட பூஜை அறையை உருவாக்கிக் கொடுத்தோம். இது என் தோழிகள் சுதா செல்வக்குமார், சுசீலா இருவருடன் இணைந்து உருவாக்கியது.

கோவையில் பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட ஒரு வீட்டிற்கு, 'மீனாகாரி' முறையில் பல்வேறு வேலைப்பாடுகளைச் செய்து கொடுத்தேன். முழு திருப்தி அடைந்த அவர்கள், புதுமனைப் புகுவிழா அன்று என்னை நேரில் அழைத்து, அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் கவுரவப்படுத்தினார்கள்.



இந்தத் துறையில் செயல்பட விரும்பும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனை?

கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் துறையைப் பொறுத்தவரை குடும்பத்தினரின் ஊக்கம் முக்கியம். எனது கணவரும், இரண்டு மகன்களும், தொடர்ந்து ஆதரவாக இருக்கின்றனர். எனவே குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் பெண்கள் இத்துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்.

கற்பனைத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், நிறைய அனுபவங்கள் பெற வேண்டும் என்று ஆர்வம் உள்ள பெண்களுக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறேன். கலைப் பொருட்களை வணிகப்படுத்த இன்றைய சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. எனவே ஆர்வமும், திறமையும் இருப்பவர்கள் துணிந்து இறங்கலாம். கலை என்றும் நம்மை கைவிடாது.


Next Story