ரோஜா பூக்கள் மூலம் உலக சாதனை


ரோஜா பூக்கள் மூலம் உலக சாதனை
x
தினத்தந்தி 16 Oct 2022 7:00 AM IST (Updated: 16 Oct 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

புற்றுநோய் என்ற கொடிய நோயால், நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் பலர் இறக்கிறார்கள். புற்றுநோயின் தாக்கம், தீவிரம் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

'கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னை தூங்க விடாமல் பண்ணுவது' என்ற அப்துல் கலாமின் வரிகள் தான் எனக்குத் தூண்டுகோலாக இருந்தவை என்று கூறும் நசீரா பேகம் புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டையில் வசிக்கிறார். 10-ம் வகுப்பு படிக்கும் இவர், கடந்த செப்டம்பர் 22-ந் தேதி 'உலக ரோஜா தினத்தை' முன்னிட்டு 4,000 சதுர அடியில் புற்றுநோய் விழிப்புணர்வு குறியீடான ரிப்பனை வரைந்து, அதில் 140 கிலோ ரோஜா பூக்களை நிரப்பி உலக சாதனை செய்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த கனடா நாட்டைச் சேர்ந்த மெலின்டா ரோஸ் என்னும் 12 வயது சிறுமியின் நினைவாக இதை செய்ததாகக் கூறுகிறார் நசீரா பேகம். இந்த முயற்சி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும், உத்வேகம் கொடுப்பதாகவும் இருக்கும் என்கிறார். அவரது பேட்டி…

"என் அப்பா நூருமுல்லா கான் துபாயில் பணிபுரிகிறார். அம்மா ஷபானா பேகம் இல்லத்தரசி. தங்கை சாரா பேகம் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.

பெற்றோர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். உலக சாதனை நிகழ்த்தியபோது அருகிலேயே இருந்து ஊக்குவித்தார்கள். எனது பள்ளி முதல்வர் தென்னரசு, துணை முதல்வர் சாதிக் அலி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இந்த சாதனையை செய்ய இடம், பொருள், மின்சாரம், உணவு, தண்ணீர், பூ ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

புற்றுநோய் என்ற கொடிய நோயால், நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் பலர் இறக்கிறார்கள். புற்றுநோயின் தாக்கம், தீவிரம் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

அதன்படி இந்த சாதனையை செய்வதற்கு பன்னீர் ரோஜாக்கள் மற்றும் சிறிய ரோஜாக்கள் என 140 கிலோ பூக்களை பயன்படுத்தினேன். 4,000 சதுர அடியில் முதலில் வரைய ஆரம்பித்தேன். ரோஜாக்களை அடுக்கும் போதுதான் எனக்கு சவாலே ஆரம்பித்தது. அனைத்து பூக்களையும் மேல் நோக்கியவாறு அடுக்கி வைக்க வேண்டும். காற்றில் அவை பறந்து விடாமல் இருக்க வேண்டும் என பல சிரமங்கள் இருந்தது.

இச்சாதனையை செப்டம்பர் 21-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஆரம்பித்து, 22-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு முடித்தேன். மொத்தம் 12 மணி நேரம் ஆனது. இதைச் செய்யும் போது இடுப்பு வலி அதிகமாக இருந்தது. அவ்வப்போது உடம்பை ஸ்டிரெச் செய்து கொண்டேன். இடையிடையே மோர் குடித்துக் கொண்டேன்.

விழிகள் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள். இந்த சாதனையை கலாம் வேல்ர்டு ரிக்கார்டு நிறுவனம் அங்கீகரித்து, சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் கோப்பை வழங்கினார்கள். மென்மேலும் பல உலக சாதனைகளை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இதன் மூலம் எனக்கு ஏற்பட்டுள்ளது" என்றார்.


Next Story