பெண்களின் அழகு நிறத்தில் இல்லை- காயத்ரி
அதற்கான அமைப்புக்கு பிங்க் அம்பாஸிடராகவும் (நல்லெண்ணத் தூதுவர்) இருக்கிறேன். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
"உங்கள் முயற்சியில் சோர்வு ஏற்பட்டால் சிறிது இளைப்பாறுங்கள்; ஆனால் முயற்சியைக் கைவிட்டுவிடாமல் போராடி வெற்றி பெறுங்கள்" என்கிறார் காயத்ரி நடராஜன். பல் மருத்துவரான இவர், பரதநாட்டியம், நீச்சல் போட்டிகளில் திருமணத்துக்குப் பிறகும் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகிறார்.
அவரிடம் உரையாடியதில் இருந்து…
"என்னுடைய சொந்த ஊர் சேலம். பெற்றோர் நடராஜன்-விஜயலட்சுமி. கணவர் ராம்குமார் சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஏழு ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறோம்"
உங்களின் திறமைகள், நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி சொல்லுங்கள்?
அடிப்படையில் நான் பல் மருத்துவர், இந்தத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் உண்டு. கல்லூரிக் காலத்தில் சிறந்த மாணவியாகத் தேர்வாகி தங்கப் பதக்கம் பெற்றேன். மருத்துவத் துறையில் நிறைய விருதுகளை வாங்கியிருக்கிறேன். பரதநாட்டியக் கலைஞராகவும், கர்நாடக இசைப் பாடகியாகவும் இருக்கிறேன். வீணை வாசிப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
நான் தேர்ந்த நீச்சல் வீராங்கனை. மேலும் மாடலிங் தொழிலையும் செய்து வருகிறேன். தற்போது கார் மற்றும் பைக் பந்தயப் பயிற்சியும் மேற்ெகாண்டு வருகிறேன். விரைவில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டைப் பெருமைப் படுத்துவேன்.
பரதநாட்டியப் பயிற்சி குறித்து சொல்லுங்கள்?
எனது ஐந்தாவது வயதில் இருந்தே ஸ்ரீரமாதேவி என்பவரிடம் பரதம் கற்றுக் கொண்டேன். கர்நாடக இசை மற்றும் வீணை இசையை காமாக்ஷி சேதுராமன் என்பவரிடம் பயின்றேன். இதுவரை உள்நாட்டிலும் பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் மொத்தம் 400 மேடைகளில் நடனம் ஆடியிருக்கிறேன். ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனையில் கர்நாடக சங்கீதம் பாடுவதுடன், பரதநாட்டியமும் ஆடுகிறேன்.
அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் வந்தது எப்படி? அதில் என்ன சாதித்திருக்கிறீர்கள்?
நான் பரதநாட்டியக் கலைஞராக இருப்பதால் மாடலிங் செய்வது எளிதாக இருந்தது. என்னுடைய கல்லூரிக் காலத்தில் இருந்தே பகுதி நேரமாக மாடலிங் செய்து வந்தேன். அப்போதுதான் மிஸ்.தமிழ்நாடு அழகிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. 2014-ல் 'மிஸ் தமிழ்நாடு' பட்டத்தை வென்றேன். திருமணத்துக்குப் பிறகும் அழகிப் போட்டிகளில் பங்கேற்றேன்.
2017-ல் 'மிஸஸ்.கோயம்புத்தூர்' பட்டம் வென்றேன். அதே ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 'மிஸஸ் இந்தியா' பட்டத்தையும் கைப்பற்றினேன். அதனையடுத்து 2018-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியிலும் பங்கேற்று 'மிஸஸ் யுனிவர்ஸ் ஈஸ்ட் ஏஷியா' பட்டத்தை கைப்பற்றினேன். அதன் பிறகு எனக்கு மாடலிங் வாய்ப்புகள் அதிகம் வந்தன. பல முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாக பணி செய்திருக்கிறேன்.
நீச்சல் வீரராக உங்கள் அனுபவங்கள்?
நீச்சலில் ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், ப்ரஸ்ட் ஸ்ரோக், பட்டர்பிளை ஸ்ட்ரோக் என்று நான்கு வகைகள் உள்ளன. நான் அதில் பேக் ஸ்ட்ரோக் ஸ்விம்மர், அதாவது பின் பக்கமாக நீந்துவதில் தேர்ந்த வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டுக்கு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறேன். அடுத்ததாக பெண்களுக்கான சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது கனவு.. அதை வெகு சீக்கிரமாகவே நிறைவேற்றுவேன்.
நீங்கள் செய்துவரும் சமூக சேவைகள் பற்றி?
சமுதாயத்துக்கு உதவும்படியான மருத்துவத் தொழிலைத்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்யும் தொழிலை செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.
எனது தாய் 2016-ல் மார்பகப் புற்றுநோயால் இறந்தார். அது என்னை வெகுவாகப் பாதித்தது. பொதுவாக பெண்கள், குடும்பத்தினருக்காகவே அதிக நேரத்தைச் செலவிடுவார்களே தவிர, தங்களின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். அதுபோல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
அதற்கான அமைப்புக்கு பிங்க் அம்பாஸிடராகவும் (நல்லெண்ணத் தூதுவர்) இருக்கிறேன். பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
இது தவிர, பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக 'கருமை அழகானது' என்ற கருத்தியலை கொண்டுவந்து, பெண்கள் நிறத்தின் அடிப்படையில் 'தான் அழகில்லை' என்று நினைக்கக் கூடாது. 'தன்னம்பிக்கையால் அவர்கள் உயர முடியும்' என்ற விழிப்புணர்வையும் அளித்து வருகிறேன்.
நான் பல் மருத்துவராக இருந்தாலும், 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கேற்ப, எல்லா வகையிலும் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் தேவையான பன்னோக்கு சிகிச்சை மையத்தை உருவாக்கி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். அதை அடைவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறேன்.