செய்வதை சிறப்பாக செய்யுங்கள் - சிந்து


செய்வதை சிறப்பாக செய்யுங்கள் - சிந்து
x
தினத்தந்தி 15 Jan 2023 7:00 AM IST (Updated: 15 Jan 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

ஒரு காலத்தில் என் தெருவில் உள்ளவர்களுக்குக்கூட என்னைத் தெரியாது. இப்போது, உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களும், நண்பர்களும் நிறைந்திருக்கிறார்கள்.

புதுவகை ஆடை வடிவமைப்பிலும், ஆடை அலங்காரத்திலும் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் வென்றவர் சிந்து. வணிகவியலில் முதுகலையையும், ஆடை வடிவமைப்பில் பட்டயப்படிப்பையும் முடித்திருக்கிறார். தற்போது பல்வேறு முன்னணி தனியார் தொலைக்காட்சிகளின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆடை அலங்கார நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இருக்கிறார்.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வரும் அவரது பேட்டி…

"நான் சிறு வயதில் இருந்தே மிகவும் ஒல்லியாக இருப்பேன். அதனால் எல்லோரும் என்னை 'ஒல்லிக்குச்சி' என்று கேலி செய்வார்கள். பெற்றோர் வாங்கித்தரும் ஆயத்த ஆடைகள், எனக்குப் பொருந்தாமல் 'தொளதொள'வென இருக்கும். இதனால் 'நமக்குப் பொருந்துவதுபோல அழகான ஆடையை நம்மால் அணிய முடியவில்லையே' என்ற மனக்குறை எனக்கு இருந்தது.

அப்போதுதான், 'எனக்கான ஆடைகளை நானே வடிவமைத்துக் கொள்ள வேண்டும்' என்ற எண்ணத்தில் ஆடை வடிவமைப்பில் பட்டயப்படிப்பைப் படித்தேன். 'என் படிப்பே என்னுடைய தொழிலுக்கு உதவிடும்' என்று நான் அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.

படிப்பை முடித்தபிறகு திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்தன. ஒரு சில காரணங்களால் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. அதில் இருந்து விலகி குழந்தைகளோடு தனியாக வசித்தேன். பொருளாதாரத் தேவைகளுக்காக வேலைக்குச் செல்லும் சூழ்நிலை வந்தது.

வருமானத்துக்காக ஏதோ ஒரு வேலையைச் செய்வதைவிட, மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆடை வடிவமைப்புத் துறைக்குள் நுழைந்தேன்.

ஆரம்பத்தில், என்னுடைய குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு சம்பாதித்தால் போதும் என்று நினைத்தேன். அதே சமயம், என்னிடம் ஒப்படைக்கும் வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று செயல்பட்டேன். வாடிக்கையாளரின் மனநிறைவுக்கு எப்போதும் முக்கியத்துவம் தருவேன். சின்ன வேலையோ, பெரிய வேலையோ எதுவாக இருந்தாலும் சிரத்தை எடுத்துச் செய்வேன்.

தொடக்கத்தில் பெண்களுக்கு மட்டுமே ஆடைகளை வடிவமைத்து வந்த நான், தற்போது பிறந்த குழந்தைகள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமான ஆடைகளையும் தயாரிக்கிறேன். இப்போது பல தொலைக்காட்சி ஊடகங்களுக்கு, ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரிகிறேன். தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கும் ஆடைகளை வடிவமைத்துத் தருகிறேன். ஆடை வடிவமைப்பு பயிலும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறேன்.

ஆடை வடிவமைப்புத் துறையில் இன்றுவரை புதிது புதிதாகக் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். 'எந்த வேலையைச் செய்தாலும், அதை சிறப்பாக செய்யவேண்டும்' என்பதே எனது கொள்கை. ஆடை வடிவமைப்பாளர், ஆடையலங்காரக் கலைஞர், மாணவர்களுக்கு வழிகாட்டி எனப் பல்வேறு தளங்களில் உற்சாகமாக இயங்கி வருகிறேன்.

பல போட்டிகளுக்கு என்னை நடுவராகவும், முக்கிய விருந்தினராகவும் பங்குபெற அழைக்கிறார்கள். இந்தத் துறை சார்ந்து என்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது என்பதையும், என்னை அங்கீகரிக்கிறார்கள் என்பதையும்தான் பெரிதாக நினைக்கிறேன். அதை நான் செய்யும் பணிக்குக் கிடைக்கும் அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.

வாழ்க்கையில் தனியாளாக நின்றபோது யாருடைய ஆதரவும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன். ஒரு வீட்டையோ, கடையையோ வாடகைக்கு எடுக்கப் போனால்கூட, தனியாக இருப்பதை வைத்து எனது 'ஒழுக்கம்' பற்றி மதிப்பீடு செய்தார்கள். சமூகத்தில், ஒற்றைப் பெற்றோர் என்றாலே தவறாகப் பார்க்கும் மனநிலை அதிகமாக இருக்கிறது. அதையெல்லாம் எதிர்கொண்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

எனது தொழில் வளர்ச்சி அடைந்து, பிரபலமாக ஆரம்பித்தபோது, என்னைப் பற்றிய கண்ணோட்டம் மாறியது. தொழிலைப் பொறுத்தவரை எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. சவால்கள் என்பது எல்லோருக்கும் இருப்பதுதான். முதலீடு பிரச்சினைகள், உரிய காலத்தில் வேலையை முடித்துக் கொடுத்தல், தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள், வாடிக்கையாளர் தரப்பில் இருந்து வந்த பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்கொண்டு சுமுகமாக முடித்திருக்கிறேன். நான்கைந்து பேர் செய்ய வேண்டிய வேலைகளை, தனி ஒருத்தியாக செய்து சமாளித்திருக்கிறேன்.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, சிறந்த தொழில் முனைவோர் விருது, தேவதைகளின் வடிவமைதி விருது, தமிழ்நாட்டில் உள்ள 50 இன்ஸ்பயரிங் வுமன் பட்டியலில் எனது பெயர் என பல அங்கீகாரங்கள் கிடைத்திருக்கிறது. ஒரு காலத்தில் என் தெருவில் உள்ளவர்களுக்குக்கூட என்னைத் தெரியாது. இப்போது, உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களும், நண்பர்களும் நிறைந்திருக்கிறார்கள். இதையே பெரிய விருதாக நினைக்கிறேன்'' என்றார்.

புடவைக்குப் பொருத்தமான நகைகள்

புடவை உடுத்தும்போது அதற்கு பொருத்தமான நகைகள் அணிவது, உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். பாரம்பரிய நகைகள், நவீன நகைகள், எளிமையான நகைகள் என எல்லாமே புடவைக்குப் பொருந்தும். அதில் உங்களுக்கு ஏற்ற நகைகளைத் தேர்ந்தெடுப்பதுதான் முக்கியம்.

நீங்கள் அணியப்போகும் சூழ்நிலையைப் பொறுத்து நகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். திருமணம் அல்லது விழாக்களில் கலந்து கொண்டால் கனமான மற்றும் அதிக வேலைப்பாடு கொண்ட நகைகள் அணியலாம். சாதாரணமாக வெளியூர் செல்லவோ அல்லது அலுவலகத்திற்கோ புடவை உடுத்தினால் இலகுரக நகைகள் சிறந்த தேர்வாகும்.

நீங்கள் உடுத்தும் புடவைக்கு ஏற்ற நகையை அணிவது அவசியம். ரவிக்கையின் பார்டர் மற்றும் நெக்லைனில் பயன்படுத்தப்படும் புடவையின் வகை, நிறம், ஜரிகையின் நிறம் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

காட்டன் புடவைகளுக்கு ஆக்சிடைஸ்டு சில்வர் நகைகள் அணிந்தால் அழகு அதிகரிக்கும். இந்த நகைகளை குர்தா, சல்வார் கமீஸ் அல்லது வெள்ளைச் சட்டைகள் மற்றும் ஜீன்ஸ் போன்ற அன்றாடம் அணியும் ஆடைகளுடனும் அணியலாம். எளிமையான டிசைன்கள் கொண்ட மெல்லிய தங்கச் சங்கிலி அல்லது டெரகோட்டா நகைகள் காட்டன் புடவைக்கு மேலும் அழகு கூட்டும்.

சிபான், க்ரீப், ஆர்கன்சா மற்றும் சாடின் வகை புடவைகளுக்கு மென்மையான டிசைன்கள் கொண்ட நகைகள் அணிவது சிறப்பாக இருக்கும். அடர் நிற புடவைகள் உடுத்தும்போது கற்கள் பதித்த நகைகள் அணியலாம். முத்து பதித்த சோக்கர் நகைகள் வெளிர் நிற புடவைகளுக்கு ஏற்றவை.


Next Story