பிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா


பிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா
x
தினத்தந்தி 22 Oct 2023 7:00 AM IST (Updated: 22 Oct 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

‘என்ன தொழில் செய்யலாம்’ என்று யோசித்தே, பல பெண்கள் காலம் தாழ்த்தி விடுகிறார்கள். மற்றவர்களை பார்த்து, அந்த தொழிலை நாமும் செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டு பலர் தோல்வி அடைகிறார்கள். எந்த தொழிலுமே வெற்றி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.

"நாம் செய்யும் செயலை விரும்பி செய்யும்போது, எதிர்கொள்ளும் சிறு சிறு பிரச்சினைகள் நமக்கு சவாலாகவே தோன்றாது. நம்முடைய தனித்துவமானது நமக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும்" என்கிறார் சென்னை அமைந்தகரையில் வசிக்கும் வித்யா. பொறியியல் பட்டதாரியான இவர், தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறார். இருந்தபோதும், பெண்களுக்கு வருமானம் தரும் துறைகளில் முதன்மையானதாக இருக்கும் உணவுத்துறையால் ஈர்க்கப்பட்டார். தற்போது அதிலும் பகுதி நேரமாக செயல்பட்டு வருகிறார். தனக்கென ஒரு புதிய தொழிலையும், அதன் மூலம் தனிப்பட்ட அடையாளத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். அவரது பேட்டி.

தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் நீங்கள் உணவுத்துறையில் கால்பதித்தது எப்படி?

நான் சிறுவயதில் இருந்தே நன்றாகப் படிப்பேன். மருத்துவர் ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தேன். படிப்பை முடித்ததும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு என்னுடன் பணியாற்றிய பிரசாந்த் பத்மநாபன் என்பவர் மீது காதல் வசப்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் அவரை கரம் பிடித்தேன்.

என் கணவர் கேரளாவைச் சேர்ந்தவர். எனது மாமியார் வீட்டில் உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். உணவுப் பிரியையான நான், அவர்களின் உணவுப் பழக்கத்தை பார்த்து முதலில் ஆச்சரியப்பட்டேன். வீட்டு விசேஷங்கள் மற்றும் பண்டிகைகளின்போது அவர்கள் தயாரிக்கும் உணவுகள் என்னை அதிகமாக ஈர்த்தன.

குறிப்பாக எனது மாமியார் தயாரித்த பாயசம் வகைகள் மிகவும் ருசியாக இருந்தது. அதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் எனது உணவு நிறுவனத்தை தொடங்கினேன். அதன் மூலம் பாயசம் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறேன்.

ஒரு குறிப்பிட்ட உணவை மையமாக வைத்து தயாரிப்பை தொடங்கிய நீங்கள் அதை எவ்வாறு சந்தைப்படுத்தினீர்கள்?

முதலில் பிறந்தநாள், தொட்டில் விழா, குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற விசேஷங்களுக்கு ஆர்டரின் பேரில் 'பால் பாயசம்' தயாரித்து விநியோகித்து வந்தோம். அதை பலரும் விரும்பி சாப்பிட்டார்கள். இதன் மூலம் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். அதன் பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில், பல்வேறு உணவுகளை தயாரிக்க திட்டமிட்டோம். அதன்படி இனிப்பு, காரம், பேக்கிங் செய்யப்படும் உணவுகள் என வாடிக்கையாளருக்கு பிடித்த முறையில் செய்துகொடுக்கத் தொடங்கினோம்.

நீங்கள் தயாரிக்கும் உணவின் சுவையை அதிகரிக்க எந்த வகையான நுணுக்கங்களை பின்பற்றுகிறீர்கள்?

சமையலில் சேர்க்கப்படும் பொருட்கள் மட்டுமே அதனுடைய சுவையை நிர்ணயம் செய்வது இல்லை. சமையல் மீது அளவில்லாத காதல் கொண்டு சமைத்தால்தான், தயாரிக்கும் உணவின் சுவை அதிகரிக்கும் என்பது எனது கருத்தாகும். என்னுடைய மாமியாரும், அவருடைய மாமியாரும் எனக்கு பல்வேறு உணவுகளை தயாரிப்பதற்கான செய்முறைகள் மற்றும் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். அதன்மூலம் உணவை சுவையாகவும், தரமாகவும் செய்யக் கற்றுக்கொண்டேன். தற்போது வரை அவர்கள் கொடுத்த வழிமுறைகளை பின்பற்றிதான் உணவை சமைத்து விநியோகித்து வருகிறேன்.

இந்தத் துறையில் ஏதேனும் சவால்களை சந்திக்கிறீர்களா? அவற்றை எவ்வாறு கையாள்கிறீர்கள்?

எந்த தொழிலை செய்தாலும் அதை முழுமனதோடு விரும்பி செய்தால், சந்திக்கும் சவால்கள் நமக்கு பெரிதாகத் தோன்றாது. நம்முடைய தனித்துவமானது நமக்கான வாய்ப்புகளை பெற்றுத்தரும். வாடிக்கையாளர்களின் மூலமாகவே, எனது நிறுவனத்துக்கான புதிய வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். தற்போதுதான் சமூக வலைத்தளங்களின் மூலம் சந்தைப்படுத்த தொடங்கி இருக்கிறேன். அதுதான் சவாலான விஷயமாக இருக்கிறது.

சமைத்த உணவுகள் விரைவாக அதன் தன்மையை இழந்துவிடும் என்பதால், அவற்றை சந்தைப்படுத்துவது சிரமமாக இருக்கிறதா?

சில உணவுகள் விரைவாகவே அதன் தன்மையை இழந்துவிடும். அத்தகைய உணவுகளை தேவையான அளவு மட்டுமே தயாரித்து வழங்குவோம். பாயசம் போன்ற திரவ உணவுகளை ஒருநாள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே அதை வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற அளவில் மட்டுமே தயாரிக்கிறோம். மற்ற திட உணவுகள் அனைத்தும் உடனுக்குடன் விற்பனை ஆவதால், அவற்றை சந்தைப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

நிதி நெருக்கடியை எவ்வாறு கையாள்கிறீர்கள்?

நிறுவனம் ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, நிதி நிலையை கவனத்துடன் கையாண்டு வருகிறோம். இதுவரை நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது இல்லை. ஆசிரமம், குழந்தைகள் இல்லம் போன்றவற்றுக்கு பெறப்படும் ஆர்டர்களை முடிந்தவரை சலுகை விலையிலேயே செய்து கொடுக்கிறோம்.

உங்களுடைய உணவு தயாரிப்பு முறை குறித்து சொல்லுங்கள்?

நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். உணவு சமைப்பதற்கு பணியாட்கள் யாரையும் நியமிக்கவில்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் முழு ஒத்துழைப்போடு இதில் செயல்பட்டு வருகிறோம். ருசி அறிந்து, சுவையை மெருகேற்றி உணவை தயாரித்து சந்தைப்படுத்துகிறோம்.

நீங்கள் பெற்ற அங்கீகாரம் என்ன?

வாடிக்கையாளர்களைத்தான் எனக்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். அவர்கள் மூலமாகவே எங்கள் நிறுவனத்துக்கு புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிக்கின்றனர்.

திருமணத்துக்கு பின்பு தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

'என்ன தொழில் செய்யலாம்' என்று யோசித்தே, பல பெண்கள் காலம் தாழ்த்தி விடுகிறார்கள். மற்றவர்களை பார்த்து, அந்த தொழிலை நாமும் செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டு பலர் தோல்வி அடைகிறார்கள். எந்த தொழிலுமே வெற்றி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். அதுவரை நிதி நிலைமையை சமாளிப்பதற்கான பொருளாதார நிலை உங்களுக்கு இருக்கிறதா? என்று முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். தற்போது எந்த துறையில் தேவை அதிகமாக இருக்கிறது என்று பார்த்து, அந்த துறையை தேர்ந்தெடுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் எடுத்த உடனேயே லாபம் ஈட்ட முடியாது. நாளடைவில் அதனுடைய தேவையும், நுகர்வும் அதிகமாகும்போது நீங்கள் நினைத்த பலனை அடைய முடியும்.


Next Story