விண்வெளி துறையும் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானது - டாக்டர் ஸ்ரீமதி கேசன்


தினத்தந்தி 12 Jun 2022 7:00 AM IST (Updated: 12 Jun 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

2009-ம் ஆண்டு என் தோழியின் பரிந்துரையால் அமெரிக்காவில் உள்ள மியாமியில் நடந்த விண்வெளித்துறை பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டேன். உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகள் வரவில்லை என்று அங்கு இருந்த அதிகாரி என்னிடம் கூறினார்.

"உங்கள் திறமைகளையும், படைப்பாற்றலையும் பயன்படுத்தி தாய் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயலாற்றுங்கள். விண்வெளித்துறை மட்டுமில்லாமல் உங்களுக்கு எந்தத் துறை பிடித்திருந்தாலும் அதில் முழுமனதுடன் ஈடுபடுங்கள்" என்கிறார் டாக்டர். ஸ்ரீமதி கேசன்.

அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஐரோப்பா மற்றும் மாஸ்கோவில் அமைந்துள்ள பிற விண்வெளி நிலையங்களின் தூதுவராக செயல்படும் ஒரே இந்தியர் இவர். அவரது பேட்டி.

"நான் பிறந்தது ராமநாதபுரம். வளர்ந்தது ஆந்திர மாநிலம் ஐதராபாத். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது விளையாட்டில் ஆல்-ரவுண்டராக இருந்தேன். தேசிய மாணவர் படையில் 'ஆல் ரவுண்ட் பெஸ்ட் கேடட்' விருது வாங்கியிருக்கிறேன். அகில இந்திய துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றிருக்கிறேன். திருமணம் முடிந்த பிறகு 16 வருடங்கள் குடும்பத்தை கவனித்துக்கொண்டு வீட்டில் இருந்தேன். அதேசமயம், புதுப்புது விஷயங்களை செய்வதிலும் கவனத்தைச் செலுத்தினேன். அவ்வாறு தோன்றியதுதான் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா.

விண்வெளித்துறையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

2009-ம் ஆண்டு என் தோழியின் பரிந்துரையால் அமெரிக்காவில் உள்ள மியாமியில் நடந்த விண்வெளித்துறை பற்றிய மாநாட்டில் கலந்துகொண்டேன். உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு குழந்தைகளும் அங்கு வந்திருந்தனர். இந்தியாவில் இருந்து மட்டும் ஐந்து வருடங்களுக்கு மேலாக குழந்தைகள் வரவில்லை என்று அங்கு இருந்த அதிகாரி என்னிடம் கூறினார்.

அது எனக்கு மிகவும் கவலை தரக்கூடிய விஷயமாக இருந்தது. எனவே முதல் கட்டமாக 108 குழந்தைகளை நாசா விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். இந்தத் தகவலை விளம்பரப்படுத்தியபோது, பல பள்ளிகள் அவர்களது குழந்தைகளை அனுப்ப ஆர்வமாக இருந்தனர். இவ்வாறு 108 குழந்தைகள் சேர்ந்தவுடன் பாஸ்போர்ட் மற்றும் விசா தயார் செய்து, வெற்றிகரமாக 2010-ம் ஆண்டு நாசா பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று இந்தியா திரும்பினேன். இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை நாசா மற்றும் பிற விண்வெளி நிலையங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறேன்.

உங்களது ேநாக்கம் பற்றி கூறுங்கள்?

விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான எனது நிறுவனத்தை 2011-ம் ஆண்டு தொடங்கினேன். விண்வெளி சுற்றுலா செல்வதன் அடுத்த கட்டமாக ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் தயார் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கான குழுவில் கிராமப்புற குழந்தைகளும் ஈடுபட வேண்டும் என்பதால் 'இளம் விஞ்ஞானி' என்ற பெயரில் ஒரு போட்டி நடத்தினேன். அதில் விண்வெளி, விவசாயம், தொழில் நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் செய்து வரலாம் என்று அறிவித்தோம்.

இதன் மூலம் அறிமுகம் ஆன மாணவன்தான் தற்போது எங்கள் குழுவில் தலைமை விஞ்ஞானியாக இருக்கும் ரிஃபாத். சிறுவயதில் இருந்தே செயற்கைக்கோள் செய்ய வேண்டும் என்பதே அவரது கனவாகும். எங்கள் குழுவில் உள்ள 12 பேரும் மாணவர்கள். புதிய இளம் இந்தியாவை உருவாக்கி, எதிர்கால சந்ததியினருக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வத்தை ஏற்படுத்துவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கமாகும்.

விண்வெளி ஆராய்ச்சியில் உங்கள் பங்களிப்பு என்ன?

முதன் முதலாக ஒரு 'பலூன் செயற்கைக்கோள்' செலுத்தலாம் என்று முடிவு செய்தோம். பலூன் செயற்கைக்கோள் என்றால் மிகப்பெரிய பலூனில் ஹீலியம் வாயு நிரப்பி, அதில் பாராசூட் மூலம்

மின்னணு சாதனங்களை பொருத்தி பறக்க விடுவது. வளிமண்டலத்தில், அடுக்கு மண்டலத்தை அடைந்தவுடன் பலூன் உடைந்து, மின்னணு சாதனம் மட்டும் பாராசூட் உதவியுடன் கீழே வரும். அழகிய புகைப்

படங்கள், வெப்பநிலை மற்றும் இதர கணிப்புகளை இத்தகைய மின்னணு சாதனம் மூலம் எடுக்க முடியும்.

இதை முதன் முதலாக செலுத்தியது நாங்கள்தான். இவ்வாறு, பலரது விமர்சனங்களைத் தாண்டி வெற்றிகரமாக 18 பலூன் செயற்கைக்கோள்கள், 2 துணை சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள் மற்றும் 2 சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறோம்.

நாங்கள் தயாரித்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளான 3.8 செ.மீ. கனசதுரம் அளவுள்ள, 64 கிராம் எடை கொண்ட 'கலாம் சாட்', 2017-ம் ஆண்டு நாசாவால் செலுத்தப்பட்டது. பின்பு 800 கிராம் எடையுள்ள 10 செ.மீ. கனசதுர 'ஸ்கைசாட்' எனும் செயற்கைக்கோள், 2018-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டில் செலுத்தப்பட்டது. இவை இரண்டுமே துணை சுற்றுப்பாதை செயற்கைக்கோள் ஆகும்.

அதேபோல 2019 மற்றும் 2021-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ அனுப்பிய ராக்கெட்களில் நாங்கள் தயாரித்த சுற்றுப்பாதை செயற்கைகோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.

விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?

விண்வெளித் துறையில் ஈடுபாடு கொண்டு, பல பெண் விஞ்ஞானிகள் இந்தியாவில் பணிபுரிந்தாலும், தலைமை பொறுப்பை இதுவரை எந்தப் பெண்ணும் ஏற்கவில்லை. பெண்கள் செய்த சாதனைகளுக்கு அங்கீகாரம் கிடைத்தால், இன்னும் நிறைய பெண்கள் விண்வெளித்துறையில் ஈடுபடுவார்கள்.

விண்வெளித் துறையில் இந்திய மாணவர்களின் ஆர்வம் எவ்வாறு உள்ளது?

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார்கள். விண்வெளித் துறையும் நாட்டு வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். தற்போது இளம் தலைமுறையினர் 300-க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' எனப்படும் விண்வெளி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். அவர்களுக்கேற்ற அனுமதியும், அங்கீகாரமும் கிடைத்தால் பல மாணவர்களை ஈர்க்க உதவும்.

நீங்கள் பெற்ற அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள் என்ன?

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்காக 'அப்துல் கலாம் விருது', உலக மனிதாபிமான இயக்கத்தின் முத்தரப்பு சார்பில் உலகளாவிய உச்சி மாநாட்டில் 'ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்', இங்கிலாந்து நாட்டின் 'ரீகல் பிரிட்டிஷ் விருது', சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகத்தால் 'வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்' விருது, யுனிபைட் ப்ரைன்ஸ் மற்றும் ஆசியா ஆப்பிரிக்க சேம்பர் சார்பில் விண்வெளித் துறையில் 'மிகவும் போற்றப்படும் உலகளாவிய இந்தியர்' என்ற பட்டம் போன்றவற்றை பெற்றுள்ளேன்.

உங்கள் எதிர்கால லட்சியம் பற்றி?

இந்தியாவில் உற்பத்தித் துறைமுகத்துடன் கூடிய உலகப் புகழ்பெற்ற விண்வெளிப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதே என் லட்சியம் ஆகும்.


Next Story