தமிழ் எங்கள் உயிரில் கலந்தது - இந்திரா ஜவகர்
இந்திராவின் முன்னோர்கள், மராட்டிய மாநிலத்தில் இருந்து 1600-களில் தஞ்சாவூர் வந்தவர்கள். தஞ்சைத் தமிழை அள்ளிப் பருகியதால், கைமாறாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன்னால் இயன்றது அனைத்தையும் செய்து வருகிறார், இந்திரா
"தமிழ் மொழியில் உச்சரிப்பு முக்கியமானது. 'ழ'கரம் தமிழுக்கே உரித்தானது. அதனை சரியாக உச்சரிக்க வேண்டும் என்று, எனது தந்தை ஒவ்வொரு முறையும் வலியுறுத்துவார்" என்று தனது தந்தையை நினைவு கூர்ந்தார் முனைவர் இந்திரா ஜவகர். மனம் முழுக்க தமிழ் மணம் கமழும் இந்திராவின் முன்னோர்கள், மராட்டிய மாநிலத்தில் இருந்து 1600-களில் தஞ்சாவூர் வந்தவர்கள். தஞ்சைத் தமிழை அள்ளிப் பருகியதால், கைமாறாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன்னால் இயன்றது அனைத்தையும் செய்து வருகிறார், இந்திரா. அவரது பேட்டி.
வீட்டில் மராத்தி ஒலிக்கும்போது தமிழார்வம் எப்படி வந்தது?
இப்போதும் வீட்டில் மராத்தியில்தான் உரையாடுகிறோம். ஆனால், தமிழ் எங்கள் உயிரில் உணர்வாய் கலந்துவிட்டது. எனது அப்பா ராஜேந்திரன், மிகவும் விரும்பி, தமிழாசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தார். நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்தார். பாரதி, பாரதிதாசன் படைப்புகள் வீடு முழுவதும் நிறைந்து இருக்கும்.
தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றேன். என் தாயார் சரஸ்வதி பாய் எனக்களித்த ஊக்கம் தனித்துவமானது. போட்டிகளில் வெல்லும்போது பள்ளிகள் பரிசுகள் தந்தாலும், ஒவ்வொரு வெற்றிக்கும் அவர் தனியாகப் பரிசுகள் தந்தார். இவையெல்லாம் முழுமையாகத் தமிழுடன் நான் ஒன்றுவதற்கு காரணமாக அமைந்தன.
ஆசிரியராக பணியாற்றியது குறித்து சொல்லுங்கள்?
அரசுப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றினேன். எனது வகுப்புகளில், திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டுவேன்.தமிழ் இலக்கியத்தில் வரும் பாடல்கள் இன்றைய சூழலுக்கு எப்படிப் பொருந்துகிறது என்று விளக்குவேன். அது மாணவர்களுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவிகித தேர்ச்சியைக் கொடுத்தேன். அதற்கான ஊக்கப்பரிசு அரசு சார்பில் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியையாகி பின்பு விருப்ப ஓய்வு பெற்று, தமிழ்ப்பணிகள் செய்து வருகிறேன்.
கொரோனா காலகட்டத்தில் தமிழ்ப் பணியைத் தொடர முடிந்ததா?
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ப்பணி செய்ய முடிந்தது. 'ஸ்கைப்' வழியாக தமிழ் வகுப்புகள் நடத்தினேன். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்றனர். இப்போதும் அந்த வகுப்புகளைத் தொடர்ந்து வருகின்றேன். யூ-டியூப் சேனல் ஒன்று நடத்தி வருகின்றேன்.
இதில் தமிழ், தமிழர் கலைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெறுகின்றன. தோல்பாவைக் கூத்து, மரக்கால் ஆட்டம், பறை இசைக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை வழங்குகிறேன்.
நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து சொல்லுங்கள்?
கம்போடியா உலகத் தமிழ்க்கவிஞர்கள் மாநாட்டில், உலக ராஜேந்திர சோழன் விருது அரசால் வழங்கப்பட்டது. நல்லாசிரியர் விருது, அந்தமான் தமிழ்ச் சங்கம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, சர்வதேச பேச்சாளர் விருது, கலை மாமணி விருது போன்ற பல விருதுகள் பெற்றிருக்கிறேன்.
தமிழில் காலத்திற்கும் பேசப்படும் ஒரு காவியம் படைக்க வேண்டும் என்பது என் கனவு.