இளம் தலைமுறைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் முபின் ஈர்ஷாத்


இளம் தலைமுறைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் முபின் ஈர்ஷாத்
x
தினத்தந்தி 9 Oct 2022 7:00 AM IST (Updated: 9 Oct 2022 7:01 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை பருவம் சிந்திக்கவும், செயல்படவும் ஏற்றது. அவர்களது திறமையை வெளிக்கொண்டு வர சின்ன உந்துதல் போதும்.

"மண்ணுக்குள் மறைந்திருக்கும் தங்கத்தைப் போல ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதனை சரியாக வெளிக்கொண்டு வந்தால் அவர்கள் புடம் போட்ட தங்கமாக மின்னுவார்கள்" என்கிறார் முபின் இர்ஷாத். கதை சொல்லி, மேடை பேச்சாளர், எழுத்தாளர், பயிற்சியாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வரும் இவர், குழந்தைகளுக்கான பிரத்யேக பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரது பேட்டி…

"நான் பிறந்து வளர்ந்தது கன்னியாகுமரியின் கடைக்கோடியில் உள்ள ஆளுர் என்ற கிராமம். சிறு வயதில் இருந்தே படிப்பதும், தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறுவதும் மிகவும் பிடிக்கும். பள்ளியில் நடனம், நாடகம், பேச்சுப்போட்டி என எது நடந்தாலும் முதல் ஆளாக பங்கேற்றேன். கல்லூரி படிப்பை முடித்த மறுநாளே எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால் நான் பணியாற்ற விரும்பியதால், ஓராண்டு மட்டும் வேலை செய்வதற்கு அனுமதி வாங்கினேன்.

பின்னர் சென்னையில் உள்ள சிறிய ஐ.டி. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கிராமத்தில் இருந்து வந்ததால், பிறரிடம் பழகுவது, பேசுவது சிரமமாக இருந்தது. இருப்பினும் சமாளித்து பணியாற்றினேன். ஓராண்டுக்கு பிறகு குடும்பத்தினர் முடிவின் படி திருமணம் செய்து கொண்டேன். அதன் பின்னர் தான் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை அனுபவிக்க ஆரம்பித்தேன்.

மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்ற, கணவர் உறுதுணையாக இருந்தார். திருமணம் முடிந்து தேனிலவுக்கு கூட செல்லாமல், எனக்கு சாப்ட்வேர் துறை சம்பந்தமாக பாடம் எடுத்தார். கணினி சம்பந்தப்பட்ட பயிற்சி, கோடிங் போன்ற அனைத்தையும் கற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர் சென்னையில் உள்ள பிரபல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் பணியின் காரணமாக நெதர்லாந்து நாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். அதற்கு பிறகு கலிபோர்னியா, சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பணியாற்றினேன். பின்னர் 8 ஆண்டுகள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்தேன்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிய நீங்கள் குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தை தொடங்க காரணம் என்ன?

அமெரிக்காவில் வசித்தபோது, ஒருநாள் எனது மகன் படித்த பள்ளியில் இருந்து அவனது ஆசிரியை என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். "உன் மகன் படிப்பில் நன்றாக செயல்பட்டாலும், பிறருடன் பழகுவதில்லை. அவனுக்கு நண்பர்கள் என யாருமே கிடையாது. அவனை கவனிக்க வேண்டியது உன் கடமை" என அறிவுரை கூறினார்.

இது ஒரு அம்மாவாக எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. 'பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையா? அல்லது பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதா?' என்ற கேள்வி எழுந்தது.

எனது மகனுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுப்பதற்காக நான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்தேன். அவனை கராத்தே மற்றும் நடனப் பயிற்சியில் சேர்த்தேன். இருந்தபோதும் அவனிடம் ஓரளவுக்கு மட்டுமே முன்னேற்றத்தை பார்க்க முடிந்தது. எனவே குடும்பத்தினருடன் ஒன்றாக இருந்தால், எனது மகனின் திறமையை மேம்படுத்தலாம் என நினைத்து இந்தியா திரும்ப முடிவெடுத்தோம்.

இங்கே வந்ததும் பப்ளிக் ஸ்பீக்கிங் எனப்படும் மேடை பேச்சு தொடர்பான பயிற்சிகளில் மகனுடன் சேர்ந்து நானும் பங்கேற்றேன். அந்தப் பயிற்சியில் எனது மகன் சாம்பியன்ஷிப் வாங்கினான். அதுதான் எனக்கும், மகனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

எனது மகன் மட்டுமில்லாமல் இப்போதுள்ள பல பிள்ளைகள் பிறருடன் பேசுவது, சகஜமாக பழகுவது, வகுப்பறைகளில் கேள்வி கேட்பது போன்ற விஷயங்களை செய்வது கிடையாது. கம்ப்யூட்டர், வீடியோ கேம், செல்போன் என டிஜிட்டல் திரைக்குள் மூழ்கி கிடக்கும் குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வைக்க வேண்டும். அவர்களுக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிப்படுத்தக்கூடிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி மையத்தை தொடங்கினேன்.



குழந்தைகளுக்கு எத்தகைய பயிற்சிகளை தருகிறீர்கள்?

பெரும்பாலான பெற்றோர்களிடம், தங்களது பிள்ளைகள் புத்தகத்தில் உள்ளதை படித்து, நிறைய மதிப்பெண்களை வாங்கி தேர்ச்சி பெற்றால் போதும் என்ற மனநிலை உள்ளது. ஆனால் நான் ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒளிந்திருக்கும் தனித்திறமையை வெளியே கொண்டு வர முயற்சிக்கிறேன். குழந்தை பருவம் சிந்திக்கவும், செயல்படவும் ஏற்றது.

அவர்களது திறமையை வெளிக்கொண்டு வர சின்ன உந்துதல் போதும். கூச்ச சுபாவத்தோடு வளர்பவர்கள், எதிர்காலத்தில் எந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள முடியாமல், தோல்விகளை கண்டு முடங்கிவிடுகின்றனர். எனவே குழந்தை பருவத்திலேயே அவர்களை சமூகத்துடன் நெருங்கிப் பழகவும், துணிச்சலாக பேசவும், கேள்வி கேட்கவும் வைக்கிறோம்.

குழந்தைகள் மனதில் தோன்றும் ஐடியாக்களை வெளிக்கொண்டு வருவது, அதனை எழுத்தாக மாற்றுவது, மேடையில் தைரியமாக பேசுவது போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம்.

உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள் என்ன?

2017-ம் ஆண்டு ஊரணி அறக்கட்டளை வழங்கிய '100 உழைக்கும் பெண் சாதனையாளர்கள்' பட்டியலில் இடம் பிடித்தேன். கல்வித் துறையில் டிரெண்ட் செட்டராக உழைக்கும் பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் 'ஹெச்ஆர் அவார்டு 2022' பெற்றேன். சினெர்ஜி ரைட்டர்ஸ் போரம் வழங்கும் 'பெண்களின் எழுச்சி விருது' வாங்கினேன்.


Next Story