பனைகளைக் காக்கும் கவிதா காந்தி
பனை மரங்களைக் காப்பதற்காக ‘பனை எனும் கற்பகத்தரு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறேன். இயற்கையின் மீது காதல் கொண்ட பலரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
அழிந்து வரும் பனை மரங்களைக் காக்க பல முயற்சிகளை சட்டப்பூர்வமாக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறார் கவிதா காந்தி. இயற்கை மீது அதிக காதல் கொண்ட இவர், நீர்நிலைகள் மற்றும் பனை மரங்களைக் காப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அறக்கட்டளையை நிறுவி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
அவருடன் நடந்த சுவாரசியமான உரையாடல் இதோ…
ராமநாதபுரத்தைச் சேர்ந்த நான், சென்னையில் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். இசையின் மீது ஆர்வம் இருந்ததால், 'இசை செல்வம்' எனும் குரலிசை படிப்பையும் முடித்திருக்கிறேன். சிறுவயதில் இருந்தே இயற்கை மீது அதிக ஈடுபாடு உண்டு. நீர்நிலைகளும், பனைமரங்களும் இயற்கையின் முக்கியமான ஆதாரங்கள். இவை அழிக்கப்படுவதால் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும் என்று தெரிந்துகொண்டேன். எனவே அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறேன்.
சட்டம் பயிலும் ஆர்வம் எப்படி வந்தது?
ஒரு முறை, பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில், வழக்கறிஞர் வேடமிட்டு கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். அதன் பின்னர் சக மாணவர்கள் என்னை 'குட்டி லாயர்' என அழைத்தார்கள். அதுவே எனக்குள் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையை விதைத்தது. அதன்படியே முயற்சி செய்து வழக்கறிஞர் ஆனேன். சமூக சீர்கேடுகளுக்கு எதிராக பொதுநல வழக்குகள் தொடுத்து தீர்வு காணுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பனை மரங்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது எப்படி?
எனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு போகும் போதெல்லாம் பனை மரங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனம்பழம் ஆகிய உணவுப் பொருட்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு முறை திருவிழாவிற்காக நான் சென்றிருந்தபோது, ஊரின் முகப்பில் இருந்த பனை மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அது என்னை கவலைக்குள்ளாக்கியது. அதன்பின்பு தான் தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவில் இருந்து காக்க என்னால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அவற்றைப் பற்றி ஆராயத் தொடங்கினேன்.
பனைமரத்தில் 800 வகையான பயன்கள் உள்ளன. பனை இருந்தாலும், இறந்தாலும் பயன் தரும் 'கற்பக விருட்சம்'. உணவுப் பொருட்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருட்கள், உரம் என பலவகையான பொருட்கள் பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது இடிதாங்கியாகவும், சூறாவளி, சுனாமி போன்றவற்றின் வேகத்தை குறைக்கவும் பயன்படுகிறது.
பனை மரங்களைக் காப்பதற்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் என்ன?
கடந்த 11 வருடங்களாக இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். பனை மரங்களைக் காப்பதற்காக 'பனை எனும் கற்பகத்தரு' என்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறேன். இயற்கையின் மீது காதல் கொண்ட பலரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ராமநாதபுரத்தில் இதற்காக 6 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி நடத்தினேன். இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். 'வீட்டுக்கொரு பனை' என பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி இருக்கிறேன்.
மத்திய மற்றும் மாநில அரசுக்கு 'பனைமர அழிவு' பற்றி பல மனுக்கள் மற்றும் கடிதங்கள் அனுப்பியுள்ளேன். இதன் மூலமாகவும் சில தீர்வுகள் கிடைத்தன. சமூக வலைத்தளங்கள் வாயிலாக இதுபற்றிய விழிப்புணர்வுகளை பகிர்ந்து வருகிறேன். இதைப் பார்த்து வெளிநாடுகளில் இருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்துள்ளது. பனை தொழிலாளிகளுக்குத் தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறேன். குழுக்கள் மூலம் பனை விதைகளையும் விதைத்து வருகிறோம்.
உங்களது மற்ற பொதுநல சேவைகள் பற்றி சொல்லுங்கள்?
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் மாசுபாடு போன்றவற்றுக்கு எதிராகவும், சமூக பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவ்வப்போது சமூக பிரச்சினைகள் பற்றிய சட்ட ரீதியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறேன். அதோடு இயற்கையை காக்க வேண்டும் என்ற பணிவான கோரிக்கையையும் அவர்கள் முன் வைத்து வருகிறேன்.
குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு இருக்கிறது?
எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தார் எனக்கு ஆதரவாக இருந்து ஊக்குவித்து வருகிறார்கள். என் குழந்தைகளும், தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பனை மரங்களின் சிறப்புகளை மற்றவர்களிடம் எடுத்துக் கூறி வருகிறார்கள். எங்கள் வீட்டில் நடைபெறும் விசேஷ நாட்களில் பனை விதைகளை விதைப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.
நீங்கள் பெற்றுள்ள அங்கீகாரம் என்ன?
பெஸ்ட் அட்வகேட் விருது, உமென்ஸ் ஐக்கானிக் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளேன். ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 'பனை இளவரசி' என அறிமுகப்படுத்தப்பட்டேன். என்னுடைய முயற்சியால் பனை மரங்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால், அதுவே மகிழ்ச்சிக்குரிய விஷயம். பனை மரங்கள் பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறேன்.