கல்விக் கண் திறக்கும் ககென்யா
இதுவரை 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் அவரது மையத்தில் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. இவரது மையத்தில் படித்த பல பெண்கள், வெளிநாடுகளுக்குச் சென்று கல்லூரியில் பயின்று, தேர்ந்தெடுத்த துறையில் தலை சிறந்து விளங்கி தங்கள் கிராமத்துக்கு ககென்யா போல உதவி வருகிறார்கள்.
தரமான கல்வி ஒருவரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. அதை உணர்ந்த பலர், கல்வி கற்று, தான் கற்ற கல்வியால் தனது சமூகத்துக்கும் பலன் கிடைக்கும்படி செய்திருக்கிறார்கள். அந்தவரிசையில் கென்யா நாட்டைச் சேர்ந்த ககென்யா, தனது கிராமமும் தன்னோடு உயர வேண்டும் என்று இன்றுவரை பாடுபட்டு வருகிறார்.
கென்யா நாட்டில் இருக்கும் சிறு கிராமத்தில், மசாய் எனும் பழங்குடி சமூகத்தில் பிறந்தவர் ககென்யா. அவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து குடும்ப வாழ்வில் சிக்கித் தவிப்பதைத்தாண்டி, வேறு சில கனவுகள் இருந்தன.
இளம் பெண்களை துன்புறுத்தும் வகையில் பல கொடுமையான சடங்குகள் அவரின் சமூகத்தில் இருந்தன. 13 வயது இருக்கும்போது அந்த சம்பிரதாயம், சிறு வயது திருமணம் என்ற பெயரில் ககென்யாவின் வாழ்விலும் நுழையப் பார்த்தது. ஆனால் ககென்யா, குழந்தை திருமணத்திற்கு சம்மதிக்காமல், தான் மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்று தந்தையுடன் போராடி கல்வியைத் தொடர்வதற்கு சம்மதம் பெற்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த ககென்யாவிற்கு அமெரிக்காவில் கல்லூரி படிப்பைத் தொடர இலவச வாய்ப்பு வந்தது. ஆனால், ஒரு கிராமத்தையே எதிர்த்து கல்வியைத் தொடர்வது என்பது சாதாரண விஷயம் இல்லை.
ககென்யா 'நன்றாகப் படித்து தனது கிராம முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்' என்று வாக்குறுதி கொடுத்ததால், கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவர் அமெரிக்கா சென்று படிப்பதற்கான நிதியை திரட்டிக் கொடுத்தனர். ககென்யா கல்லூரி படிப்பு முடிந்தவுடன், கற்பித்தலில் டாக்டர் பட்டமும் பெற்றார். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
2008-ம் ஆண்டு முதல், தனது சர்வதேச சமூக நல அமைப்பு மூலம், பல பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்து, குழந்தை திருமணம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தனது சொந்த கிராமத்திற்குச் சென்றார். அவரின் மசாய் சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களின் உதவியால், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வி அவசியம் என்று வலியுறுத்தி, 2009-ம் ஆண்டு முதல், தன்னுடைய கல்வி மையத்தின் மூலம் தனது கிராம பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கி வருகிறார்.
பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கொடுமையான சம்பிரதாயமும், குழந்தை திருமணமும் செய்யக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அன்றிலிருந்து அனைத்து பெண் குழந்தைகளும் சந்தோஷமாக தங்கள் கனவுகளை நிறைவேற்ற புறப்பட்டனர்.
இதுவரை 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையில் அவரது மையத்தில் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. இவரது மையத்தில் படித்த பல பெண்கள், வெளிநாடுகளுக்குச் சென்று கல்லூரியில் பயின்று, தேர்ந்தெடுத்த துறையில் தலை சிறந்து விளங்கி தங்கள் கிராமத்துக்கு ககென்யா போல உதவி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணமான ககென்யா, சமூக ேசவைக்காக சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றுள்ளார்.