ஆளுமைத்திறனை வளர்ப்பது அவசியம் - மோனிகா
‘கல்வி கற்கவில்லை, வயதாகிவிட்டது, பருமனாக இருக்கிறேன்’ இப்படி தங்களிடம் உள்ள குறைகளை நினைத்து பல பெண்கள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். உடலில் ஏற்படும் குறைகளை தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. சாதனைகள் புரிவதற்கு கல்வியோ, வயதோ எப்போதும் தடையாக இருக்காது.
"மாணவர்கள் திட்டமிடுதல், நேரமேலாண்மை இவை இரண்டையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பாடங்களைப் படித்து மதிப்பெண்கள் வாங்குவது மட்டுமில்லாமல், உங்கள் ஆளுமை திறனையும் வளர்த்துக்கொள்வது அவசியம். தலைமைப் பண்பு அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதை வெளிப்படுத்தும் விதத்தில்தான் உங்களுடைய ஆளுமையை மற்றவர்கள் அறிய முடியும்" என்கிறார் ஜெ.மோனிகா ரோஷினி.
உளவியல் ஆலோசகர், தன்னம்பிக்கை பேச்சாளர், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பவர், சமூக சேவகி, திறமையுள்ள குழந்தைகளை கண்டறிந்து தன்னுடைய நிறுவனம் மூலமாக 'உலக சாதனை விருதுகள்' வழங்குபவர் என்று பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் மோனிகா.
இவர் சென்னை கூடுவாஞ்சேரியில் பிறந்து, காட்டுப்பாக்கத்தில் வளர்ந்து, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். செவிலியர், வணிக மேலாண்மை, உளவியல், நரம்பியல் போன்ற படிப்புகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். இவரிடம் பேசியதில் இருந்து:
இலவச மேம்பாட்டுப் பயிற்சி மூலமாக மாணவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுப்பது என்ன?
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில், பெரும்பாலான குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் மூழ்கிகிடக்கிறார்கள். அவர்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு என்ன செய்யலாம்? அவர்கள் மனதிற்குள் எப்படிப்பட்ட பொதுவான விஷயங்களை புகுத்தலாம்? என்பதை அறிந்து கொண்டு, அவர்களிடம் சில கருத்துகளை முன்வைப்பேன்.
காலம் என்பது காற்றைப் போன்றது. அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. காற்று வீசும்போது அனுபவிப்பதுபோல, காலம் கனியும்போது அதைப் பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி. தவறவிட்ட காலம் திரும்ப வராது. படிப்புக்கான காலம் உன்னுடையது. அதில் வேண்டாத ஆசைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதை மாணவர்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கிறேன்.
பெண்களுக்கு எத்தகைய உளவியல் சார்ந்த விஷயங்கள் தேவைப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்?
'கல்வி கற்கவில்லை, வயதாகிவிட்டது, பருமனாக இருக்கிறேன்' இப்படி தங்களிடம் உள்ள குறைகளை நினைத்து பல பெண்கள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக்கொள்கிறார்கள். உடலில் ஏற்படும் குறைகளை தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. சாதனைகள் புரிவதற்கு கல்வியோ, வயதோ எப்போதும் தடையாக இருக்காது. இதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
பெற்றோருக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனை என்ன?
இப்போது பள்ளி விடுமுறை என்பதால், பல குழந்தைகள் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி உள்ளனர். தொழில்நுட்பங்கள் பற்றி தெரியாத பெற்றோர், தங்கள் குழந்தைகளை கண்காணிப்பது சிரமமானது. அதே நேரத்தில், குழந்தைகள் தவறான வழியில் செல்லக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் அவர்களுக்கு இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர் குழந்தைகளை திட்டாமல், பின் விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும். அவர்களது சந்தேகங்களை தெளிவுபடுத்துவதிலும் தாய்க்கு அதிக பொறுப்புகள் உள்ளது. ஆனால், சில தாய்மார்கள் அவசரப்பட்டு குழந்தைகளை திட்டுவது, மற்றவர்கள் முன்னிலையில் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது குழந்தைகளிடம் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
திறமையானவர்களை கண்டறிந்து, உலக சாதனை விருதுகள் வழங்குவது பற்றிச் சொல்லுங்கள்?
சிறந்த ஆளுமைகளை தேடிக் கண்டுபிடித்து விருதுகள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே உருவானது. அந்தப் பணியை தொடங்கியபோது, ஆரம்பத்தில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்களையே அதிகமாக கண்டறிய முடிந்தது. ஆனால், என்னுடைய நோக்கம் அது அல்ல. எனவே பொதுவான விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்களை அதிகமாக தேடிக் கண்டுபிடித்து விருதுகள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இதுவரை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கியிருக்கிறோம். திறமை உள்ளவர்களை அங்கீகரிப்பதற்கும், அவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதற்கும் எனது நிறுவனம் மூலமாக பல விதத்தில் உதவிகள் செய்து, ஊக்கப்படுத்தி வருகிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்வி, வர்த்தகம், சேவை போன்றவற்றில் தமிழ்ப் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
இங்கு வசிக்கும் அனைத்து பெண்களும், தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சுயதொழில் செய்கின்றனர். நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் குடும்பத்தை கவனிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். குடும்ப சண்டை, விவாகரத்து போன்றவை இங்கே அதிக அளவில் இல்லை. வறுமையில் வாழ்பவர்களுக்கு அன்னதான கூடம் அமைப்பது, உணவுப் பொருட்கள் வழங்குவது, மற்ற நாடுகளில் ஏற்படும் பேரிடர்களுக்கு உதவி வழங்க நிதி திரட்டுவது, தமிழ் சார்ந்த கலை திருவிழாக்கள் நடத்துவது என்று எண்ணற்ற பங்களிப்பை தமிழ்ப் பெண்கள் செய்து வருகின்றனர்.
நீங்கள் பேச்சாளராக உருவானது குறித்து சொல்லுங்கள்?
பள்ளியில் படிக்கும்போது வினாடி வினா, கட்டுரைப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஒருநாள் என்னுடைய ஆசிரியை என்னிடம், "ஏன் நீ பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது? பரிசு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். அது எதிர்காலத்தில் உன்னை தனியாக அடையாளப்படுத்திக் காட்டும்" என்று கூறினார். அதுதான் எனக்கு பேச்சின் மீது ஆர்வத்தை உண்டாக்கியது. இப்போதும் மேடைகளில் ஏறி பேசும்போது, என்னுடைய ஆசிரியர் கூறியதை நினைவில் கொள்கிறேன்.