மாற்றி யோசித்தால் ஜெயிக்கலாம்
சட்டம் பயின்று, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்து, பல முயற்சிகளுக்குப் பின்னர் அது முடியாமல் போகவே, தனக்கென தனி பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறார்.
'மிகவும் விருப்பப்பட்டு நாம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தால், அதை எண்ணியே முடங்கி விடக்கூடாது. மாற்று வழிகளை சிந்தித்து செயல்பட்டு வெற்றி பெறலாம்' என்பதற்கு சான்றாக விளங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த நந்தினி பிரியா.
சட்டம் பயின்று, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்து, பல முயற்சிகளுக்குப் பின்னர் அது முடியாமல் போகவே, தனக்கென தனி பாதையை உருவாக்கிக்கொண்டு அதில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறார்.
அவருடன் உரையாடியபோது!
"ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதற்கு 10 வருடம் முயற்சி செய்தேன். அதில் வெற்றி அடையாததால், மாற்றி யோசித்து இயற்கை மூலிகை அழகுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். பெண்களிடையே சுயதொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு அமைப்பையும் நடத்துகிறேன்.
எனக்குத் தமிழ்நாட்டில் கிடைக்கும் தாவரம் மற்றும் மூலிகைகளின் மருத்துவப் பயன்களைத் தெரிந்து கொள்வதில் சிறு வயது முதலே ஆர்வம் இருந்தது. எனவே அது தொடர்பாக தொழில் தொடங்க நினைத்தபோது மூலிகை அழகுப் பொருட்கள் பற்றி ஆராய்ந்தேன். அதற்கு மக்களிடையே விருப்பமும், வரவேற்பும் இருப்பது தெரிந்ததும் உற்சாகமாக எனது நிறுவனத்தைத் தொடங்கினேன்.
அதில் முருங்கைக்கீரை உபயோகித்து தயாரிக்கப்பட்ட கூந்தல் தைலம் மற்றும் மூலிகை சோப் ஆகியவற்றை விற்பனை செய்கிறேன். இன்று சமூக வலைத்தளம் மிகவும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளது. இதன் மூலம் நுகர்வோருடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதும், தரமான பொருட்களை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும் சுலபமாக முடிகிறது'' என்றார்.
இயற்கை அழகுப் பொருட்களின் பயன்கள்
பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைத்தும் உடனே நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றிலும் இந்த மனநிலையே பலருக்கு இருக்கிறது. அதனால் அழகுப் பராமரிப்புக்கு ரசாயனம் கலந்த பலவிதமான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இவை உடனடி பொலிவு தந்தாலும், காலப்போக்கில் பல்வேறு விதமான பிரச்சினைகளை உண்டாக்கும்.
ஆனால், இயற்கை அழகுப் பொருட்கள் பலன் கொடுப்பதற்கு சில காலங்கள் எடுத்துக் கொண்டாலும், அதன் பயன்பாட்டால் பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். சருமத்துக்கும், கூந்தலுக்கும் இயற்கை அழகுப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.
இயற்கை அழகு பராமரிப்புப் பொருட்கள் சருமத்தில் ஏற்படும் வறட்சியை நீக்கும். சரும செல்களில் உண்டாகும் சேதங்களைச் சீர்செய்யும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கும். இயற்கையான பொலிவும், பளபளப்பும் தரும்.
கூந்தலுக்குப் பயன்படுத்தப்படும் அழகுப் பொருட்கள் முடியின் வேர் வரை சென்று, அதன் வளர்ச்சிக்கும், நீண்ட ஆயுளுக்கும் உதவுகிறது. இயற்கை அழகுப் பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது கூந்தல் அடர்த்தி யாகவும், நீளமாகவும், மிருதுவாகவும் இருக்கும். கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், கண் மற்றும் மன ஆரோக்கியத்தையும் சீராக்கும்.
மூலிகை இலைகள், கற்றாழை, எலுமிச்சை, தேன், வெங்காயம், பூண்டு, தயிர், பால், பூக்கள், பழங்கள் போன்றவற்றை அழகுக்காக பயன்படுத்தும்போது, அவற்றில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு நேரடியாகக் கிடைக்கும்.