மாம்பழம் விளைவிக்கும் மருத்துவர்
முதன்முறையாக தமிழகத்தில் ‘அல்போன்சா’ விளைச்சல் செய்தேன். இமாம்பஸ், செந்தூரம், பங்கனப்பள்ளி, ராஜபாளையம் சப்பட்டை, மல்லிகா, சேலம் குண்டு, நாட்டு வகைகளான மல்கோவா, கொட்டாச்சி, கல்லாமை எனப் பல ரக மாம்பழங்களை 30 ஏக்கர் பரப்பில் விளைவிக்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்தில், நூறு ஏக்கர் பரப்பளவில் கடந்த 25 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார் 'வர்மக்கலை' மருத்துவர் ராஜரீகா. இவர் பலவிதமான மாம்பழ வகைகளை ஆர்கானிக் முறையில் விளைவித்து வெற்றி கண்டிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
இயற்கை விவசாயம் மீது ஆர்வம் வந்தது எப்படி?
நான் சிறுவயதில் இருந்தே 'இயற்கையை நேசிப்போம், பாதுகாப்போம்' என்ற சிந்தனையுடன் வளர்ந்தவள். என் கணவர் சவுந்தரபாண்டியன் சிறுநீரக மருத்துவர். செயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரும் சிறுநீரகக் கோளாறு, மாரடைப்பு போன்ற பல நோய்களால் பாதிக்கப்படுவதாகக் கூறினார்.
அதனால் நான் இயற்கை விவசாயி நம்மாழ்வார் ஏற்படுத்திய அமைப்பில் சேர்ந்து, இயற்கை விவசாயம் பற்றித் தெரிந்து கொண்டேன். இப்போது எங்கள் விவசாயப் பண்ணையில் 'ஆர்கானிக்' முறையில் பல உணவுப் பயிர்களை வளர்க்கின்றேன். குறிப்பாக இயற்கை முறையில் பலவிதமான மாம்பழங்களை விளைச்சல் செய்து சாதித்திருக்கிறேன்"
எந்த வகை மாம்பழங்களை விளைவிக்கிறீர்கள்?
முதன்முறையாக தமிழகத்தில் 'அல்போன்சா' விளைச்சல் செய்தேன். இமாம்பஸ், செந்தூரம், பங்கனப்பள்ளி, ராஜபாளையம் சப்பட்டை, மல்லிகா, சேலம் குண்டு, நாட்டு வகைகளான மல்கோவா, கொட்டாச்சி, கல்லாமை எனப் பல ரக மாம்பழங்களை 30 ஏக்கர் பரப்பில் விளைவிக்கிறேன்.
இதுதவிர காஞ்சன், சாக்கியா, கிருஷ்ணா, என்.எஸ்.ஆர்., டி.எஸ்.ஆர். என்ற ஐந்து வகை நெல்லிக்காய்களை எனது பண்ணையில் 15 ஏக்கர் பரப்பில் பயிர் செய்கிறேன்.
135 வகையான மரங்களை இங்கு வளர்க்கிறேன். செம்மரம், தேக்கு, குமிழ், பூவரசு, வாகை போன்ற அரிய வகை மரங்களையும், கேரளாவில் அதிகம் வளரும் பதிமுகம் மரம் மற்றும் கருங்காலி மரங்களையும், வேப்ப மரங்களையும் வளர்க்கிறேன்.
பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், வராககுர பஜனம், மூலிகைப் பூச்சி விரட்டி, ஐந்திலைக் கரைசல் போன்ற இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம்.
உரங்களை நாங்களே தயாரிக்கிறோம். இதற்காக ஒரு நாட்டுப் பசுமாடு, மூன்று கன்றுக்குட்டிகள், இருபது ஆடுகள், அறுபது கோழிகளை இங்கே வளர்க்கிறோம். அவற்றின் கழிவுகள் மூலம் இயற்கை உரங்களைத் தயாரிக்கிறோம்.
இயற்கை விவசாயம் மூலம் மூலிகைப் பொடிகளை தயாரித்துக் கொரோனா தடுப்பிற்கு இலவசமாகக் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் அளித்தோம்.
மாம்பழப் பிரியர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன?
மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 'கல் வைத்து' பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிடாதீர்கள். அது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.