அழகுப் பொருட்கள் விற்பனையில் அசத்தல் வெற்றி


தினத்தந்தி 14 Aug 2022 7:00 AM IST (Updated: 14 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு என்ன தொழில் தொடங்கப் போகிறோம் என்பது பற்றிய தெளிவு அவசியம். இந்தத் தெளிவை புத்தகங்கள் படிப்பதாலும், இணையத்தில் தேடுவதாலும் பெறமுடியும்.

ழகுப் பொருட்களின் வாசத்தால் நிறைந்திருக்கிறது ஹசீனாவின் இல்லம். கோவை குனியமுத்தூரில் வசித்து வரும் இவர், இளம் பெண் தொழில் முனைவோராக ஜொலித்து வருகிறார்.

ஆங்கில இலக்கியம் படித்திருந்தபோதும், அழகு சாதனங்கள் மீதான ஆர்வத்தால் அதையே தொழிலாக செய்து வருகிறார் ஹசீனா. தனது கடும் உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் இவர் தயாரித்த பொருட்கள் விரைவாகவே வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றன. தற்போது இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, லண்டன் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இவரது தயாரிப்புகள் ஏற்றுமதியாகின்றன. அவரது பேட்டி.

அழகுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டது எப்படி?

அழகு பராமரிப்புக்காக நான் பயன்படுத்திய சில பொருட்களை என் சருமம் ஏற்கவில்லை. எனவே கல்லூரியில் படிக்கும்போதே இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு, எனக்கான அழகு பராமரிப்பு பொருட்களை நானே தயாரிக்கத் தொடங்கினேன். அவற்றைப் பயன்படுத்தியபோது நல்ல மாற்றத்தை உணர முடிந்தது. சக தோழிகள் என் முகப்பொலிவு கண்டு வியந்தனர். அவர்களுக்கும் நான் தயாரித்த பொருட்களைக் கொடுத்தேன்.

நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டபோதும், என் சருமத்தின் பொலிவு குறையாமல் இருந்தது. அதனால் என்னுடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட மற்றவர்களும், எனது தயாரிப்புகளை வாங்கிப் பயன்படுத்தினர். அவர்கள்தான் இதையே தொழிலாக மாற்றினால் என்ன? என்று ஆலோசனை கொடுத்தனர்.

தொழில் தொடங்கிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

2017-ம் ஆண்டு முதன்முதலில் 'கஸ்தூரி மஞ்சள் குளியல் பொடி' தயார் செய்து கடை வீதிக்குக் கொண்டு சென்றேன். ஆரம்பத்தில் அலட்சியமாகப் பார்த்த சில கடைக்காரர்கள், அதை வாங்கி விற்பனை செய்த பிறகு, வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, அதிக ஆர்டர்கள் கொடுத்தனர். பிறகு மேலும் இரண்டு பொடிகளைத் தயார் செய்தேன். அவற்றை சில சூப்பர் மார்கெட்டுகளில் வேலை பார்த்த பெண்களிடம் கொடுத்தேன். அவர்கள் உபயோகித்து பார்த்தபிறகு நல்ல பலன் கிடைத்ததால், பலருக்கும் பரிந்துரைத்தனர்.

ரசாயனங்கள் எதுவும் கலக்காமல் பாரம்பரிய முறைப்படி செய்வதால், எனது தயாரிப்புகளை பயன்படுத்தியவர்களுக்கு முகப்பரு போன்ற பிரச்சினைகள் நீங்கின. இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பைப் பற்றி தேடித்தேடிப் படித்தேன். பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

அழகுப் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் உங்கள் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தார்களா?

நான் இந்தத் தொழிலில் ஈடுபட்டதே அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. சென்னை, மும்பை போன்ற இடங்களில் இருந்து ஆர்டர் கிடைத்து, தயாரிப்புகளை கொரியர் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோதுதான் குடும்பத்தினரிடம் சொன்னேன். அதைக் கேட்டதும் அப்பா மஸ்தான், அம்மா சுபைதா இருவருமே யோசித்தார்கள். 'இது உனக்குத் தேவையா?' என்று கேட்டார்கள்.

'நாங்கள் உனக்கு என்ன குறை வைத்தோம்? எதற்கு இந்த வேலையைத் தொடங்கினாய்?' என்று அப்பா கேட்டபோது, 'என்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறீர்கள். ஆனாலும், எனக்குப் பிடித்ததை நான் செய்ய விரும்புகிறேன்' என்று சொன்னேன். என் தாய்மாமா எனக்கு ஆதரவாக இருந்தார். எனது தயாரிப்புகளுக்கு தொடர்ந்து கிடைத்த வரவேற்பைப் பார்த்து பெற்றோர் பாராட்டினார்கள். சகோதரிகளும், சகோதரரும் ஊக்கம் அளித்தனர். தொடர் உழைப்பால் சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, தற்போது எனது தயாரிப்புகள் சந்தைகளில் விற்பனையாகின்றன.

உங்கள் தொழிலில் 'திருப்பு முனை' என்று எதைச் சொல்வீர்கள்?

கொரோனா காலகட்டம்தான். 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் என்னுடைய தயாரிப்புகளை அறிமுகம் செய்தேன். மும்பையைச் சேர்ந்த 'மதுரா' என்ற பெண் ஆர்வமாக விசாரித்தார். அவருக்கு 3 பொருட்களை அனுப்பி வைத்தேன். உபயோகித்து திருப்தி அடைந்த அவர், பின்னர்

பலருக்கும் பரிந்துரைத்தார். அதன் பிறகு காஷ்மீர், அசாம் என்று பல பகுதிகளில் இருந்து ஆர்டர்கள் வந்தன. இதுதான் பெரிய திருப்புமுனை.

நெருக்கடிகள் ஏதேனும் ஏற்பட்ட அனுபவம் உண்டா?

அதுவும் கொரோனாவால்தான். ஆர்டர்கள் வந்தபோதும் அதை அனுப்பி வைப்பதில் பிரச்சினைகள் வந்தன. தனியார் கொரியர் சேவையை சரிவர பயன்படுத்த முடியாத நிலை. அப்போது எனக்கு அஞ்சல் அலுவலகம் கை கொடுத்தது. அந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கூட, வழக்கத்தை விட கூடுதலாக வேலை செய்ய முடிந்தது.

அழகுப் பொருட்கள் தயாரிப்புடன் நின்றுவிட்டீர்களா?

இல்லை. மசாலா தயாரிப்பில் இறங்கினேன். சமையலில் அதீத ஆர்வம் கொண்டவள் நான். அதனால் மசாலாப் பொருட்கள் தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டதில்லை. அதேசமயம், தேவையைப் பொறுத்தே எல்லாவற்றையும் தயாரிக்கிறேன்.

தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனை?

மூன்று விஷயங்கள்தான். ஒன்று, என்ன தொழில் தொடங்கப் போகிறோம் என்பது பற்றிய தெளிவு அவசியம். இந்தத் தெளிவை புத்தகங்கள் படிப்பதாலும், இணையத்தில் தேடுவதாலும் பெறமுடியும். இரண்டாவது, தொடர்ந்து இயங்குவது. சுயதொழில் மேற்கொள்ளும்போது பல்வேறு சிக்கல்கள் வரக்

கூடும். அவற்றைக் கண்டு பயப்படாமல் செயல்பட வேண்டும். அடுத்தது தரம். தரத்தில் சமரசம் கூடாது. நம்மை நம்பி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வீண்போகக்கூடாது. ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். இவை மூன்றும் இருந்தால் நீங்களும் வெற்றிகரமான தொழில் முனைவோர்தான்.


Next Story