தன்னம்பிக்கையூட்டும் ஜெயக்கொடி


தன்னம்பிக்கையூட்டும் ஜெயக்கொடி
x
தினத்தந்தி 11 Sept 2022 7:00 AM IST (Updated: 11 Sept 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் மாற்றுத்திறனாளி பெண்களும், ஏழ்மையால் சிரமப்படும் பெண்களும் அதிகமாக இருப்பதைக் கண்டேன். அவர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என நினைத்தேன்.

'உடலில் ஏற்படும் குறைபாடு, வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளி கிடையாது' என்ற நோக்கத்தோடு மாற்றுத்திறனாளி பெண்களிடையே நம்பிக்கையை விதைத்து வருகிறார் ஜெயக்கொடி. கடலூர் மாவட்டம் வி.காட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் இவர், 3 வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இரு கால்களிலும் நடக்கும் திறனை இழந்தவர். 10-ம் வகுப்பு வரை படித்துள்ள ஜெயக்கொடி, அதன் பின்னர் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி பெற்றுள்ளார்.

தையல் கலை பயிற்றுநராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். ஆனால் பணி இடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற அடிப்படை வசதி இல்லாததால், ஜெயக்கொடியால் அந்தப் பணியில் நீடிக்க முடியாமல் போனது.

இதனையடுத்து வேலைவிட்டு வெளியே வந்த ஜெயக்கொடி, சுய சம்பாத்தியம் இருந்தால் மட்டுமே, வாழ்க்கையை நல்லமுறையில் நடத்த முடியும் என்று நம்பினார். எனவே சுய தொழில் ஆரம்பிக்க எண்ணிய அவர், அது தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

தற்போது ஜெயக்கொடி நடத்தி வரும் தையல் பயிற்சி பள்ளி மூலமாக ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி பெண்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களும் பயிற்சி பெற்று சொந்தமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.

தனது அனுபவங்கள் பற்றி ஜெயக்கொடி பேசும்போது, ''கிராமப்புறங்களில் மாற்றுத்திறனாளி பெண்களும், ஏழ்மையால் சிரமப்படும் பெண்களும் அதிகமாக இருப்பதைக் கண்டேன். அவர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என நினைத்தேன். அப்போது தான் எனக்குத் தெரிந்த தையல் கலையைப் பிறருக்குச் சொல்லிக்கொடுத்தால், அது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்குவதோடு, எனக்கும் தொழிலாக மாறும் என்று முடிவெடுத்தேன்.

இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். மாற்றுத்திறனாளிப் பெண்கள் உட்பட ஏராளமானோர் பயிற்சி பெற்று இப்போது சொந்தமாகத் தொழில் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி மாணவிகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து நானே வேலையும் கொடுக்கிறேன். இப்போது என்னிடம் 8 பேர் வேலை செய்கிறார்கள். இதில் சிலர் எனது நிறுவனத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.

தமிழக அரசு பிளாஸ்டிக்கிற்குத் தடை விதித்துள்ளது. இதனால் மக்கள் மீண்டும் துணிப்பைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். எனவே, காய்கறி மற்றும் பிற பொருட்கள் வாங்கப் பயன்படுத்தும் துணிப் பைகளை விதவிதமான டிசைன்களில் தைத்து வருகிறோம். அதேபோல் பள்ளிச் சிறுவர்களுக்கான லஞ்ச் பேக், ஸ்கூல் பேக், சீருடைகள் ஆகியவற்றையும் தைத்துக்கொடுக்கிறோம்'' என்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்குத் தன்னம்பிக்கையூட்டுகிற ஜெயக்கொடிக்கு, லியோனார்ட் செஷ்யர் டிசபிலிட்டி என்ற அமைப்பு தேசிய அளவிலான விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.


Next Story