முகத்தில் உருவாகும் மாயத் தோற்றம்
ஆரம்பத்தில் நாடக கலைஞர்களுக்கு மேக்கப் வடிவமைக்கவும், நடிகர்களின் உடலில் ஓவியம் வரையவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. பிறகு மாடல்கள் மூலம் தனது ஓவியக் கலையை வெளிப்படுத்தினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் ஓவியக்கலை பல்வேறு பரிமாணங்களில் மேம்பட்டு வருகிறது. அந்தவகையில் 'இல்யூஷன்' எனப்படும் மாயத் தோற்றங்களை, முப்பரிமாண முறையில் வரைவது தற்போது பிரபலமாக இருக்கிறது.
ஓவியக் கலைஞர்கள் சுவர்கள், பொருட்கள், தரை ஆகியவற்றில் முப்பரிமாண ஓவியங்களை வரைந்து வியக்க வைக்கின்றனர். இதில் இருந்து மாறுபட்டு, தென்கொரியா நாட்டைச் சேர்ந்த 27 வயது டியான் யூன், முப்பரிமாண இல்யூஷன் ஓவியங்களைத் தனது முகத்தில் வரைந்து வருகிறார். இதன்மூலம், உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சிறு வயது முதலே, ஓவியங்கள் வரைவதில் அதிக ஈடுபாடு கொண்ட டியான், தொலைக்காட்சியில் கார்ட்டூன் மற்றும் பயமுறுத்தும் படங்கள் பார்க்கும்போது அதில் வரும் நடிகர்கள் எவ்வாறு மேக்கப் போட்டு இருக்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வந்தார். டியானின், பெற்றோர் அவரது ஓவிய ஆர்வத்துக்கு ஊக்கமளித்தனர்.
தென் கொரியா நாட்டிலேயே, மிகச் சிறந்த கலை பள்ளிகளான யெவான் ஆர்ட்ஸ் மேல்நிலை மற்றும் சியோல் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பள்ளிகளில் படித்து முதலாவதாக தேர்ச்சி பெற்றார் டியான். கலைக் கல்லூரியில் சேர்ந்து, ஓவியக்கலையின் நுணுக்கங்களை நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.
ஆரம்பத்தில் நாடக கலைஞர்களுக்கு மேக்கப் வடிவமைக்கவும், நடிகர்களின் உடலில் ஓவியம் வரையவும் அவருக்கு வாய்ப்பு வந்தது. பிறகு மாடல்கள் மூலம் தனது ஓவியக் கலையை வெளிப்படுத்தினார்.
பின்னர் தனது முகத்தையே ஓவியம் வரைவதற்கு தளமாக பயன்படுத்தி, தன்னுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்த முடிவு செய்தார். மனிதரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தவும், பல்வேறு உணர்வுகளை உண்மையாக சித்தரிக்கவும், முகம் தான் சரியானது என்று கருதினார்.
தொடக்கத்தில், உடலில் வரையக்கூடிய பாடி பெயிண்ட் மற்றும் அக்ரலிக் பெயிண்ட் பயன்படுத்தினார். ஆனால், பாடி பெயிண்ட் ஓவியங்கள் அவர் எதிர்பார்த்த அளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. எனவே அக்ரலிக் பெயிண்ட் மட்டுமே பயன்படுத்தி, ஓவியத்தை மேக்கப் போல அவரது முகத்தில் அச்சு அசலாக வரைகிறார்.
"வலது கையால் மட்டுமே வரைவதால் பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டியுள்ளது. அது சிரமமாக இருந்தாலும், இறுதியில் முழுமைப் பெற்ற ஓவியத்தை முகத்தில் காணும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை" என்று கூறும் டியான், "சில நேரம் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவதை விட, ஓவியத்தில் வெளிப்படுத்துவது எளிதாக இருக்கிறது" என்கிறார்.
டியான் வரைந்த பல படைப்புகளுக்கு, உலகளாவிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைத்துள்ளது. தனது நகங்களில் ஐந்து விதமான உணர்ச்சிகளையும் முகங்களாக அச்சு அசலாக வரைந்து, அவற்றுக்கு சிறிது முடியையும் பொருத்தி பதிவு செய்தார். அந்த படைப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது. உலகின் பல பிரபலமான பிராண்டுகளுடன் இணைந்தும் பல வடிவமைப்புகளை தயார் செய்துள்ளார் டியான்.
ஆர்வமும், திறமையும் இருந்தால், எந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதை டியான் யூன் நிரூபித்திருக்கிறார்.