வேதங்களை நேசிக்கும் வெளிநாட்டுப் பெண்


வேதங்களை நேசிக்கும் வெளிநாட்டுப் பெண்
x
தினத்தந்தி 7 Aug 2022 7:00 AM IST (Updated: 7 Aug 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

1979-ம் ஆண்டு பிரேசிலுக்கு திரும்பிய குளோரியா, பல மாணவர்களுக்கு வேதங்கள் சொல்லிக் கொடுத்து வந்தார். சக நண்பர்களின் உதவி மற்றும் கடும் முயற்சிக்குப் பின் 1984-ம் ஆண்டு, புகழ்பெற்ற கடலோர நகரமான ரியோ டி ஜெனிரோவிற்கு அருகிலுள்ள கோபகபனா நகரில் வேதாந்த ஆய்வுப் பள்ளியை நிறுவினார்.

தங்களும், கலாசாரங்களும், பாரம்பரிய பழக்கங்களும் செழிப்பாக செயல்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. இங்கு ஒவ்வொரு மதத்தினரும், தங்கள் மதத்தின் சிறப்புகளை போற்றி பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் இந்து மதத்தில் உயர்ந்ததாகக் கருதப்படுபவை வேதங்கள். ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவற்றால் ஈர்க்கப்பட்டு, அவற்றை கற்றுக் கொண்டு, தனது தேசத்திலும் வேதங்களின் புகழை பரவச் செய்து வருகிறார், பிரேசில் நாட்டைச் சேர்ந்த குளோரியா அரியேரா.

வேதத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம்:

குளோரியா, பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனரியோவில் பிறந்தார். 'தான் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?' என்று தனக்குள்ளேயே அடிக்கடி கேட்டுக்கொள்வது அவரது வழக்கம். அவ்வாறு இருக்கும்போது, 1973-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் சுவாமி சின்மயானந்தாவின் வேதாந்தம் பற்றிய சொற் பொழிவைக் கேட்டபோது, வேதங்கள் மீதும், ஆன்மிகம் மீதும் அவருக்கு பற்று ஏற்பட்டது. அதைப் பற்றி அறிய 1974-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார்.

வேதங்களை கற்றல்:

மேற்கத்திய பெண்ணாக இருந்தபோதிலும், இந்திய பண்பாட்டை கற்றுக்கொண்டு, மும்பையில் சுவாமி சின்மயானந்தா மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோரின் சீடராக மாறிய குளோரியா, சமஸ்கிருத மொழி, வேதங்கள், ஆன்மிக பாடல்கள் போன்ற வற்றை கற்றுக்கொண்டார்.

வேதங்கள் பற்றிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பெறவும், இந்தியாவில் உள்ள புனித தலங்களை பார்க்கவும், வடக்கில் இருந்து தெற்கு வரை பல கோவில்களுக்கு சென்றிருக்கிறார். இந்த அனுபவம் பற்றி அவர் கூறியபோது, ''நாம் வாழ்வது ஒரு எளிய வாழ்க்கை என்று கற்றுக்கொண்டேன். அதன் பிறகு என் வாழ்வில் நிம்மதியை உணர்ந்தேன். இந்தியாவின் உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையின் அடையாளத்தை உணர முடிந்தது" என்றார்.

வேதாந்த ஆய்வு:

1979-ம் ஆண்டு பிரேசிலுக்கு திரும்பிய குளோரியா, பல மாணவர்களுக்கு வேதங்கள் சொல்லிக் கொடுத்து வந்தார். சக நண்பர்களின் உதவி மற்றும் கடும் முயற்சிக்குப் பின் 1984-ம் ஆண்டு, புகழ்பெற்ற

கடலோர நகரமான ரியோ டி ஜெனிரோவிற்கு அருகிலுள்ள கோபகபனா நகரில் வேதாந்த ஆய்வுப் பள்ளியை நிறுவினார்.

மேலும் சமஸ்கிருதம், வேதங்கள் மற்றும் புராணக் கதைகளான மகாபாரதம், ராமாயணம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுத்தார். சமஸ்கிருதம், போர்த்துகீசியம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார்.

"எனது மாணவர்களிடம் ஒரு மாற்றத்தை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. வேதங்களில் உள்ள நன்மையையும், மகத்துவத்தையும் அவர்கள் அனுபவிக்கத் தொடங்கினர்'' என்று மகிழ்ச்சியாக கூறுகிறார், குளோரியா. பகவத் கீதை மற்றும் உபநிடதங்களை போர்த்துகீசிய மொழியிலும் மொழிபெயர்த்தார்.

பத்மஸ்ரீ விருது:

40 வருடங்களுக்கு மேலாக வேதங்களை பிரேசிலில் பரப்பி வருவதற்காக, 2020-ம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதைப் பெற்றார், குளோரியா.


Next Story