காமன்வெல்த் போட்டி : இந்தியாவின் தங்க மகனுக்கு குவியும் வாழ்த்துக்கள் - ஜெரேமி லால்ரினுங்கா கடந்து வந்த பாதை..!!
தங்க பதக்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பர்மிங்காம்,
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன. இதில் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது. குறிப்பாக காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப்பதக்கக் கணக்கை திறந்து வைத்தார் வீராங்கனை மீராபாய் சானு.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பளு தூக்குதல் ஆண்களுக்கான 67 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் ஜெரேமி லால்ரினுங்கா தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மிசோரமைச் சேர்ந்த இவர், 300 கிலோ (140 கிலோ + 160 கிலோ) எடையை வெற்றிகரமாக தூக்கி பளு தூக்குதலில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றார்.
19 வயதே ஆன இவர் மிசோரம் மாநிலம் ஐஸ்வால்-லில் பிறந்தவர். 2018 ஆம் நடைபெற்ற யூத் ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் ஆண்கள் 62 கிலோ பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று வரலாறு படைத்தார் ஜெர்மி லால்ரின்னுங்கா. மேலும் 2020 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பை பட்டத்தையும் இவர் வென்றார்.
கடந்த ஆண்டு தாஷ்கண்டில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பிற்குப் பிறகு முழங்கால் மற்றும் முதுகு காயங்களுடன் ஜெர்மி அவதிப்பட்டார். தொடர்ந்து கடுமையாக பயிற்சி மேற்கொண்ட அவர் தனது முதல் காமன்வெல்த் போட்டியிலே தனது கடின உழைப்பின் மூலம் இந்தியாவின் தங்க மகனாக மாறியுள்ளார். இந்த நிலையில் இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்து செய்தியில், " தனது முதல் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்கா-வுக்கு வாழ்த்துக்கள். அவர் அற்புதமான காமன்வெல்த் சாதனையை படைத்துள்ளார். இளம் வயதிலேயே அவர் மகத்தான பெருமையையும் புகழையும் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார்.