காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்


காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி: இந்தியா-கனடா அணிகள் இன்று மோதல்
x

காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா கனடாவை இன்று எதிர்கொள்கிறது.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கி பிரிவில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணி 11-0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனைதொடர்ந்து, இந்திய அணி தனது அடுத்த ஆட்டதில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 4-4 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் இங்கிலாந்து ஏழு புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி இன்றைய போட்டியில் கனடாவை எதிர்கொள்ள உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியாவும் கனடாவும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இந்தியா அதிகபட்சமாக 26 முறை வெற்றி பெற்றுள்ளது. கனடா நான்கு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிந்தது.

இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி வேல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஆண்களின் பிரிவின் இரு அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.


Next Story