ஓ.டி.டி.யில் வெளியானது 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்'
டாம் ஹார்டி நடிப்பில் உருவாகியுள்ள 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' படம் உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஸ்பைடர் மேன் 3'. இப்படத்தில் வந்த வெனம் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதன்பிறகு வெளியான ஸ்பைடர்மேன் படங்களில் முக்கிய வில்லனாக வெனம் இருந்தது. அதனைத்தொடர்ந்து, 'வெனம்' கேரக்டரை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2018-ம் ஆண்டு ரூபன் பிளீஷர் இயக்கத்தில் 'வெனம்' படம் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இதில், டாம் ஹார்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம், வெனம் : லெட் தேர் கிரேனஜ் என்ற பெயரில் வெளியானது. ஆன்டி செர்க்கிஸ் இயக்கி இருந்த இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து, இப்படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிபாகமாக 'வெனம்: தி லாஸ்ட் டான்ஸ்' வெளியானது.
டாம் ஹார்டி நடிப்பில் கெல்லி மார்செல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்துள்ளது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இந்த பாகத்துடன் இப்படம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் உலகளவில் 400 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.