ஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கம் செல்வார்களா ? - அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குனர்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான படம் புஷ்பா 2 தி ரூல்.
சென்னை,
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான படம் புஷ்பா 2 தி ரூல். அதற்கு முந்தைய நாள் அதாவது 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார்.
இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோத, அங்கு புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். இதனையடுத்து, அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து தெலுங்கானா போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ' அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை ஒவ்வொரு நட்சத்திரமும் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
ஏனென்றால், ஒரு திரைப்பட நட்சத்திரமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அரசியல் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அவர்கள் மிகவும் பிரபலமாக இருப்பது குற்றமா???
எனது 'க்சண க்சணம்' படத்தின் படப்பிடிப்பில் ஸ்ரீதேவியை பார்க்க வந்த லட்சக்கணக்கான கூட்டத்தில் 3 பேர் பலியாகினர். அதற்காக இப்பொழுது ஸ்ரீதேவியை கைது செய்ய தெலுங்கானா போலீஸ் சொர்க்கம் செல்லுமா???' இவ்வாறு தெரிவித்துள்ளார்.