ஓ.டி.டி சரியா, தவறா என்பது பிற்காலத்தில் தெரியும்: ஹிப் ஹாப் ஆதி


ஓ.டி.டி சரியா, தவறா என்பது பிற்காலத்தில் தெரியும்: ஹிப் ஹாப் ஆதி
x
தினத்தந்தி 26 May 2024 5:36 PM IST (Updated: 26 May 2024 6:28 PM IST)
t-max-icont-min-icon

ஓ.டி.டியில் படம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலை சிறிது குறைந்துள்ளது என ஹிப் ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

கோவையில் 'பிடி சார்' திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுடன், கலந்துரையாடினர். அப்போது ஹிப்ஹாப் ஆதி, 'கோவை அந்தம்' பாடலையும், 'வாடி புள்ள வாடி' பாடலையும் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடல்களை பாடினர். பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி, "பிடி சார் படம் காமெடி படமாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தை வைத்துள்ளோம். இப்போது பெரிய நட்சத்திர நடிகர், சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் ரசிகர்கள் பார்ப்பதில்லை. படம் நன்றாக இருந்தால் ஓடும். நன்றாக இல்லை என்றால் ஓடாது அவ்வளவுதான். ஓடிடி- யால் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரீச்சை தருகிறது. திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பும் கிடைக்கிறது. அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது. அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கார்த்திக், " பிடி சார் படம் பெண்களுக்கு பிடிப்பதாக கூறுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதும் அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள்" என்றார்.


Next Story