'பன் பட்டர் ஜாம்' படத்துக்காக பாடல் எழுதிய விஜய் சேதுபதி
பிக் பாஸ் புகழ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பன் பட்டர் ஜாம்’ படத்திலும் பாடலை எழுதியிருக்கிறார் விஜய் சேதுபதி.
சென்னை,
ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெயின் ஆப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ளனர். நிகழ்காலத்தைப் புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் இன்றைய இளைஞர்களைப் பற்றிய கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் போருக்கு மத்தியில் ராஜு பன் பட்டர் ஜாம் சாப்பிடும் படியான காட்சி இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையில் 'ஆரஞ்ச் மிட்டாய்' திரைப்படத்தில் இரண்டு பாடல்களை பாடி பாடகராக அறிமுகமானார் விஜய் சேதுபதி. இத்திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், பாடலாசிரியராகவும் உருவெடுத்தார்.
'பன் பட்டர் ஜாம்' திரைப்படத்தில் மொத்தமாக இரண்டு பாடல்களை விஜய் சேதுபதி எழுதியிருக்கிறார். இதில் 'ஏதோ பேசத்தானே... என் நெஞ்சுக்குள்ள ஆச வீசத்தானே...' என்ற பாடலை நடிகர் சித்தார்த்தும் 'காவாலா' புகழ் பாடகி ஷில்பா ராவும் பாடியுள்ளனர். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் 'பன் பட்டர் ஜாம்' திரைப்படத்தின் புரோமோஷனுக்காக சென்றிருந்த ராஜுவும் விஜய் சேதுபதி எழுதியிருக்கிற பாடல் தொடர்பாக அங்கு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.