'விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவைவிட்டு விலக காரணம் இதுதான்' - பிரபல பாலிவுட் இயக்குனர்
12-த் பெயில் நடிகர் விக்ராந்த், சினிமாவை விட்டு விலகுவது பற்றி இயக்குனர் சந்தோஷ் சிங் கருத்து கூறியுள்ளார்.
சென்னை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ராந்த் மாஸ்ஸி. கடந்த 2017 இல் வெளியான 'எ டெத் இன் தி கஞ்ச்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அதன்பின்னர் வெளியான, 'ஜின்னி வெட்ஸ் சன்னி', 'ஹசீன் தில்ருபா', 'லவ் ஹாஸ்டல்', 12-த் பெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'தி சபர்மதி ரிப்போர்ட்'. கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்தப் படம், பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றது.
இதனையடுத்து விக்ராந்த் மாஸ்ஸி, 'யார் ஜிக்ரி' மற்றும் 'ஆன்கோன் கி குஸ்தாகியான்' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், 'ஆன்கோன் கி குஸ்தாகியான்' படத்தை பிரபல இயக்குனர் சந்தோஷ் சிங் இயக்குகிறார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் விக்ராந்த் மாஸ்ஸி சினிமாவில் மேலும் உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில், அதை விட்டு விலக போவதாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், விக்ராந்த் மாஸ்ஸியின் இந்த முடிவு பற்றி இயக்குனர் சந்தோஷ் சிங் கருத்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சில சமயங்களில் நீங்கள் ஒரு முழுமையை அடைவீர்கள். அப்போதுதான் வேகத்தைக் குறைத்து, பாதையை மாற்ற வேண்டும் என்று உணர்வீர்கள். ஒரு இயக்குனராக, நடிகர்கள் 24 மணிநேரமும் வேலை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் இடைவிடாமல் வேலை செய்வதாலும், தொடர்ந்து பிஸியாக இருப்பதாலும் சிறிது வேகத்தை குறைக்க நினைப்பார்கள் ' என்றார்.