இன்று மாலை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் டிரெய்லர்
விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், பின்னர் அன்று வெளியாகாது என்று படக்குழு அறிவித்தது. அஜித் நடித்த மற்றொரு படமான 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் 'விடாமுயற்சி' திரைப்படத்தை இம்மாத இறுதியில் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனநிலையில், இன்று டிரெய்லர் வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும் விடாமுயற்சி டிரைலரில் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.