'விடுதலை 2' படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

'விடுதலை 2' படம் டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து பவானி ஸ்ரீ,கவுதம் வாசுதேவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது.
படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் ஆர் எஸ் போடெயின்மென்ட் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், நடிகர் எஸ்.ஜே.சூர்யா விடுதலை - 2 பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் தங்களின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளனர். 'விடுதலை 2' படம் உலகம் முழுவதும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'தினம் தினமும்' பாடலை வருகிற 17ம் தேதி வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.