'அமரன்' திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சி முக்கிய காரணம் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி
'அமரன்' திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சி முக்கிய காரணமாக இருந்தது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், 'அமரன்' திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சி முக்கிய காரணமாக இருந்தது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"2014-ம் ஆண்டு மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் இறுதி அஞ்சலி நிகழ்வு தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 21 குண்டுகள் முழங்க அவருக்கு அளிக்கப்பட்ட ராணுவ மரியாதை, அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடல் உள்ளிட்டவற்றை தந்தி தொலைக்காட்சியில் பார்த்தபோதுதான் மேஜர் முகுந்த் பற்றி நான் முதல் முதலாக தெரிந்து கொண்டேன். மேஜர் முகுந்த் எனக்கு அறிமுகமானது தந்தி தொலைக்காட்சி மூலம்தான். அந்த வகையில் 'அமரன்' திரைப்படம் உருவாக தந்தி தொலைக்காட்சியும் ஒரு முக்கிய காரணம். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."
இவ்வாறு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்தார்.