திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் - நடிகையிடம் ரூ.1.5 லட்சம் மோசடி

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்
திருப்பதி,
80 - 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரூபினி. ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களில் நடித்தவர், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என பல ஹிட் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், பல வருடமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் இவரை பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன்படி, சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய மற்றும் அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக சரவணன் என்ற நபர் நடிகை ரூபினியிடம் இருந்து ரூ.1.5 லட்சம் வாங்கி இருக்கிறார். ஆனால், எந்த ஏற்பாட்டையும் செய்யாத அவர் திடீரென்று தலைமறைவாகி உள்ளார். இதைனையடுத்து, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு ரூபினி கோரிக்கை வைத்திருக்கிறார்.