வதந்தி பேசியே சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள் - நயன்தாரா குற்றச்சாட்டு
நடிகை நயன்தாரா தனுஷ் அறிக்கை குறித்தும், பிரபல யூடியூப் சேனல் தன் மீது பரப்பும் வதந்தி குறித்தும் நேர்காணலில் பேசியுள்ளார்.
சென்னை,
நடிகை நயன்தாரா நடிகர் தனுஷ் உடனான சர்ச்சை, விமர்சகர்கள் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பல்வேறு சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நயன்தாராவின் வாழ்க்கை குறித்த ஆவணப் படம் கடந்த மாதம் வெளியானது. அந்த ஆவணப்படம் குறித்த காப்புரிமை விவகாரத்தில் நடிகர் தனுஷை நயன்தாரா கடுமையாக விமர்சித்தார்.
நேர்காணல் ஒன்றில் நடிகை நயன்தாரா பேசுகையில், "யூடியூப்பில் 3 நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு 50 எபிசோடுகள் வெளியிட்டால் அதில் 45 என்னைக் குறித்ததாகவே இருக்கும். ஏனென்றால் என்னைக் குறித்து பேசினால் அதிகமான பார்வைகள் கிடைத்து அதனால் பணம் சம்பாதிக்கிறார்கள். என்னை வைத்து அல்லது எனது பெயரினால் மற்றவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். வதந்திகளை மட்டுமே பேசி அந்த மூவர் பணம் சம்பாதிக்கிறார்கள். நான் அவர்களை தேவையில்லாமல் பிரபலம் ஆக்குகிறேன். நாம் 3 குரங்குகள் குறித்து கேள்வி பட்டிருக்கிறோம். பொய் பேசாது, தவறானதை கேட்காது, தவறானதை பார்க்காது. ஆனால், இந்த 3 குரங்குகள் அதற்கு எதிராக இருக்கும். பொய் மட்டுமே பேசும், தவறானதை மட்டுமே கேட்கும், தவறானதையே பார்க்கும். பேச்சு என்று பெயர் வைத்திருப்பார்கள். அவர்கள் சரியான கோமாளிகள். அவர்கள் அங்கேயேதான் இருப்பார்கள். ஆனால், என்னைக் குறித்து அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தது போலவே பேசுவார்கள் " என்று சர்ச்சைக்குரிய விமர்சகர்கள் குறித்து நயந்தாரா கிண்டலாக பேசியுள்ளார்.
தனுஷ் குறித்து பேசுகையில், "தனுஷ் மீது மரியாதை வைத்திருந்தேன், அவர் இப்படி நடந்து கொள்வார் என நினைக்கவில்லை. நாங்கள் ஆவணப்படத்தில் 4 வரி வசனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று தனுஷ், தனுஷ் மேலாளர், அவரது நண்பர்கள் என அனைவரையும் தொடர்பு கொண்டோம். ஆனால் முடியவில்லை" என்றார்.
மேலும் "நான் ஆரம்பத்திலேயே ரஜினிகாந்த் போன்ற சூப்பர்ஸ்டாருடன் பணிபுரிந்தேன். மேலும் நான் வேலை செய்த படங்களில் எனது இயக்குநர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். அதனால் தான் பாலிவுட்டில் என்னால் எளிதாக நடிக்க முடிந்தது. ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நான் தம்பியாக பார்க்கும் அட்லீக்காக நடித்தேன். அப்படத்தில் நடித்த போது ஷாருக்கான் என்னை நன்றாக பார்த்து கொண்டார்" என கூறியுள்ளார்.
நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்ற ஆவணப்படம் கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதற்கு முன்பு வெளியான அந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியை உரிய அனுமதியின்றி அதில் பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.