இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற பாடகர் 'தெருக்குரல்' அறிவு


இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற பாடகர் தெருக்குரல் அறிவு
x
தினத்தந்தி 2 Dec 2024 5:42 PM IST (Updated: 2 Dec 2024 5:50 PM IST)
t-max-icont-min-icon

ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

தென்னிந்தியாவின் பாப் மேர்லி என அழைக்கப்படும் ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு, இடஒதுக்கீடு குறித்தும், சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் பாடல்கள் மூலம் மிக அழுத்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வாரந்தோறும் வடசென்னையில் ஒவ்வொரு தெருவில் அங்குள்ள ராப் பாடகர்களை 'தெருக்குரல்' ஆல்பம் மூலம் ஒன்றிணைத்து பாடல்களை பாடி வரும் அறிவு, துப்புரவுத் தொழிலாளர்கள் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சாதி அடிப்படையில் மக்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் எனப் பல பிரச்சினைகளைப் பற்றிய பாடல்களைப் பாட வைத்து வருகிறார்.

ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான காலா திரைப்படத்தில் வரும் உரிமை மீட்போம் என்ற பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் அறிவு. காலாவை தொடர்ந்து வடசென்னை, ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது பாடல்கள் பல பாராட்டுகளை பெற்றாலும் விமர்சனங்களும் வந்தன.சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் வரும் பருந்தாகுது ஊர் குருவி பாடலை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அறிவு, தன்னுடைய பாடல் வரிகளில் எப்போதும் சமசரம் செய்துக் கொண்டதில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, 'சண்ட செய்வோம்' என்ற பாடலை எழுதி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி கவனம் பெற்றார்.

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவான மாஸ்டர் படத்தின் வாத்தி ரெய்டு பாடல் உலகமெங்கும் புகழ் பெற்றது. அவரது இசையில் உருவான எஞ்சாமி பாடலும் அவருக்கு புகழினை கொடுத்தது. இந்த பாடல் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர் அறிவுக்கும் பிரச்சினை வெடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தெருக்குரல் அறிவு அவரது இசைக்குழு உடன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார் .


Next Story