சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு மாணிக்கம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. 'ராஷ்மி ராக்கெட்' என்ற இந்திப் படத்தின் மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்தவர் இவர். நடிகை அனன்யா இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'சீதா ராமம்' படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜி.பி.ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியானது. படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதை படக்குழு அறிவித்தது.
ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா... என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது. கதையின் நாயகன் மாணிக்கத்தின் மனைவி, அவனுடைய பெரியப்பா, மச்சினன், மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன் மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது. கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும்... அவனைத் தொடர்ந்து துரத்துகிறார்கள். இவர்கள் எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது, இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறான் என்பதுதான் பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் திரு.மாணிக்கம் படத்தின் கதை.
படத்தின் முதல் பாடலான 'பொம்மக்கா' வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20 ம் தேதி வெளியாகவுள்ளது.