'ராபர்' திரைப்பட விமர்சனம்

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள 'ராபர்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
சென்னையில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'ராபர்'. இப்படத்திற்கு 'மெட்ரோ 'திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் திரைக்கதை எழுதியுள்ளார். இதில் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர். 'மெட்ரோ' சத்யா நாயகனாக நடித்துள்ள 'ராபர்' திரைப்படத்தை எஸ்.எம்.பாண்டி இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், 'ராபர்' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் சத்யா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பகலில் ஐ.டி. வேலை, இரவில் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் செயின் பறிப்பில் இளம் பெண் இறந்துவிடுகிறார். அந்த பெண்ணின் தந்தை, சத்யாவை பழிவாங்க துடிக்கிறார். இன்னொரு பக்கம் அவரது எதிரிகளும் துரத்துகிறார்கள். அதில் இருந்து சத்யாவால் தப்பிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.
கிராமத்து இளைஞன், கொள்ளைக்காரன் என இரண்டு மாறுபட்ட பரிமாணங்களில் வரும் சத்யா அந்த காதபாத்திரமாகவே மாறி மொத்தப் படத்தின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். அப்பாவி பிள்ளையாக அம்மாவிடம் நடந்துகொள்வது, பெண் பித்தனாக சபலத்தை வெளிப்படுத்துவது, பணத்துக்காக எதையும் செய்ய துணிவது என தன்னுடைய கதாபாத்திரத்தின் அத்தனை தன்மைகளையும் அலட்டாமல் செய்திருக்கிறார்.
அப்பா வேடத்தில் வரும் ஜெயபிரகாஷ், மகளை இழந்த தவிப்பையும், கொலைகாரனை பழிவாங்க துடிக்கும் ஆவேசத்தையும் அனுபவ நடிப்பில் வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். டேனியலுக்கு வில்லத்தனம் நன்றாக வருகிறது. அம்மாவாக வரும் தீபா வழக்கத்துக்கு மாறாக குறைவாக பேசியுள்ளார். இறுதி காட்சியில் அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சி.
சென்றாயன் கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்து நற்பெயர் வாங்குகிறார். பாண்டியன் கேரக்டர் நிறைவு. ஒளிப்பதிவாளர் உதயகுமார் கொள்ளையர்களின் உலகத்தை அருகில் அழைத்துச் சென்று காண்பித்துள்ளார். இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவி செய்துள்ளார்.
சில லாஜிக் மீறல்கள் பலவீனமாக இருந்தாலும் படம் சொல்லவரும் கருத்தின் ஆழம் அதை மறக்கச் செய்து விடுகிறது. செயின் பறிப்பு சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களையும், பாதிக்கப்பட்டவர்களின் மன வேதனையையும் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் சேர்த்து அட்டகாசமான படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.எம்.பாண்டி.