'புஷ்பா 2' எப்படி இருக்கிறது? - விமர்சனம்


Pushpa 2 - Review
x

புஷ்பா படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது 2-ம் பாகம் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது 2-ம் பாகம் வெளியாகி உள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில், புஷ்பா 2 படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

முதல் பாகம் முடிந்த இடத்தில் இருந்தே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. தனது தொழில் எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டி செம்மரக் கடத்தலில் தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறார் புஷ்பராஜ் ( அல்லு அர்ஜுன்). ஒரு கட்டத்தில் முதல்-மந்திரி அவரை அவமானப்படுத்துகிறார். இதனால் கோபமடையும் புஷ்பா, தன்னுடைய நெருங்கிய நட்பில் இருக்கும் எம்.பி சித்தப்பாவை (ரமேஷ் ராவ்) முதல்- மந்திரி ஆக்குவதாக சபதம் ஏற்கிறார்.

அதேவேளையில், புஷ்பாவால் தனக்கு நேர்ந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஷெகாவத் (பகத் பாசில்).

எம்.பி சித்தப்பாவை அல்லு அர்ஜுன் முதல்-மந்திரியாக்கினாரா? பகத் பாசிலிடம் இருந்து செம்மரக்கட்டைகளை காப்பாற்றினாரா? என்பது மீதி கதை.

வெளியில் யாருக்கும் அடங்காத காளை, வீட்டில் அன்பான கணவன் என இருவேறு நடிப்பால் கவர்கிறார் அல்லு அர்ஜுன். சண்டைக் காட்சிகளிலும், நடனத்திலும், டயலாக் டெலிவரியிலும் புஷ்பா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் அல்லு அர்ஜுன். மொத்தத்தில் அல்லு அர்ஜுனின் ஆளுமை படத்தை தாங்கி பிடிக்கிறது.

புஷ்பா மனைவி ஸ்ரீவள்ளியாக தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பக்கபலம்.

போலீஸ் அதிகாரி ஷெகாவத்தாக பயங்கரமாக நடித்திருக்கிறார் பகத் பாசில். அல்லு அர்ஜுனை பழிவாங்க அவர் செய்யும் காரியங்கள் திரில்லர் ரகம். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் இருப்பவர்களால் கண்களை வேறு எந்த பக்கமும் திருப்ப முடியவில்லை.

எம்.பி ராவ் ரமேஷ், முதல்-மந்திரி ஆடுகளம் நரேன், மத்திய மந்திரி ஜெகபதி பாபு, முன்னாள் சிண்டிகேட் தலைவர் சுனில், சப் இன்ஸ்பெக்டர் பிரம்மாஜி, புஷ்பாவின் வலதுகரம் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி ஆகியோர் கொஞ்ச நேரமே வந்தாலும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கலக்குகிறார் ஸ்ரீலீலா.

படத்தின் பெரிய பலமாக அமைந்திருக்கிறது ஒளிப்பதிவு. தேவி ஸ்ரீ பிரசாத் இசை ரசிக்கும்படி இருக்கிறது. பி.ஜி.எம். மற்றொரு பக்கபலம். மனைவியின் ஆசைக்காக முதல்-மந்திரியை மாற்றுவது, கடல் நீருக்கடியில் செம்மர கட்டைகளை கடத்துவது என லாஜிக் மீறல்கள் இருந்தாலும் பரபரப்பான காட்சிகள் அதை மறக்கடித்து விடுகின்றன.

தரமான கமர்ஷியல் படத்தை கொடுத்து ஒட்டுமொத்த திரையுலகையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் சுகுமார். கிளைமேக்ஸ் காட்சி, படத்தின் மூன்றாம் பாகத்துக்கான அடித்தளம்.


Next Story