பிருத்விராஜ் தேச விரோதி - "எம்புரான்" சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு!


பிருத்விராஜ் தேச விரோதி - எம்புரான் சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு!
x

எம்புரான் திரைப்பட இயக்குநரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேகமாக ரூ. 100 கோடி வசூல் செய்த மலையாள படம் என்ற புதிய சாதனையை 'எல் 2 எம்புரான்' படைத்திருக்கிறது.

வெற்றிகரமாக வசூலைக் குவித்துவரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் 2002 குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் வகுப்புவாத பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சை எழுந்தது. சர்ச்சை விரிவடைந்ததைத் தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் சில காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளனர். எம்புரான் படத்தின் மீது வலதுசாரி அமைப்புகள் கண்டனங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து படத்தில் 17 இடங்களில் காட்சிகள் நீக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.நடிகர் மோகன்லாலும் இதற்கு வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். அதிகாரபூர்வ நாளேடான 'ஆர்கனைஸர்' அந்தப் படத்தின் இயக்குநர் பிருத்விராஜை விமர்சித்து எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், "பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக உள்ளார். இது எப்போது தெரிய வந்ததென்றால், தீவுகளை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதனை வகுப்புவாத வெளிச்சத்தில் சித்தரிக்கும் விதமாக 'லட்சத் தீவுகளைக் காப்போம்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். மேலும், சமூக வலைதளங்களிலும் சிஏஏ போராட்டத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டார்.எம்புரான் படம் ஆரம்பிக்கையில் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை என்று குறிப்பிட்டனர். ஆனால், பின்வந்த காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது" என குறிப்பிட்டு எழுதியுள்ளது.

பிருத்விராஜை விமர்சிக்கும் விதமாக பாஜக அமைப்பான ''பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா' மாநில பொதுச் செயலாளரான கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில், "நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜின் வெளிநாட்டு தொடர்புகள் பற்றி விசாரிக்கவேண்டும். ஆடு ஜீவிதம் படத்திற்கு பின், அவருடைய திரைப்படங்கள் தேசவிரோத கருத்துகளையே பரப்பி வருகின்றன. எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே இருந்துள்ளன.ஆடுஜீவிதம் படப்பிடிப்பின்போது அவர் ஜோர்டன் நாட்டில் சிக்கிக் கொண்டார். அப்போது, அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் பிருத்விராஜ் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Next Story