ரீ-ரிலீஸ் செய்யப்படும் 'படையப்பா' திரைப்படம்


ரீ-ரிலீஸ் செய்யப்படும் படையப்பா திரைப்படம்
x

நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அண்மையில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி கில்லி, பில்லா, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலிஸ் ஆனது. அதிலும் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'படையப்பா' படம் மீண்டும் ரீ-ரிலீஸாக உள்ளது. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி. ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரஜினியின் அதிரடி நடிப்பு, ஸ்டைல் மற்றும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதை கொண்டாடும் விதமாக 'படையப்பா' படம் இந்த ஆண்டு திரைக்கு வருவதாக இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் படையப்பா படத்தின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் 1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் கதாநாயகன், வில்லன் என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story