49 ஆண்டுகளை கடந்த 'அவசர நிலை': `எமர்ஜென்சி' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட கங்கனா


On 49th anniversary, Kangana unveils poster for Emergency
x
தினத்தந்தி 25 Jun 2024 3:57 PM IST (Updated: 25 Jun 2024 3:58 PM IST)
t-max-icont-min-icon

`எமர்ஜென்சி' படத்தின் புதிய போஸ்டர் வெளியிட்டு ரிலீஸ் தேதியை கங்கனா அறிவித்துள்ளார்.

மும்பை,

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்திருந்தார் கங்கனா. அதைத் தொடர்ந்து மற்றுமொரு அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்பட்ட `எமர்ஜென்சி' படத்தை கங்கனாவே இயக்கி நடித்திருக்கிறார்.

ஜான்சி ராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட `மணிகர்ணிகா' படத்தைத் தயாரித்த `மணிகர்ணிகா பிலிம்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படம் கடந்த 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. பின்னர் அரசியல் காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-வது ஆண்டை தொட்டநிலையில், கங்கனா தான் நடித்து முடித்துள்ள `எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, இப்படம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்ட காலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவசர நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். 2 ஆண்டுகளாக நீடித்த அவசர நிலை இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்து பாஜக ஆட்சியமைத்த உடன் 1977 மார்ச் 21ம் தேதி திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story