ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 'லாபதா லேடீஸ்' : 'இது முடிவல்ல...'- அமீர்கான்


Not the end: Aamir Khan Productions on Laapataa Ladies missing Oscars shortlist
x
தினத்தந்தி 18 Dec 2024 2:48 PM IST (Updated: 18 Dec 2024 2:52 PM IST)
t-max-icont-min-icon

97-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றப்பட்டு உள்ளது.

மும்பை,

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கவுரவப்படுத்தும் உயரிய ஆஸ்கா் விருது ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 97-வது ஆஸ்கா் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் இந்தியாவின் 'லாபதா லேடீஸ்' திரைப்படம் தோ்வு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 85 படங்கள் ஆஸ்கர் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. அதில் இறுதி பட்டியலுக்காக 15 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அந்த இறுதி பட்டியலில் இருந்து துரதிர்ஷ்டவசமாக கிரண் ராவ் இயக்கிய ' லாபதா லேடீஸ் ' வெளியேற்றப்பட்டது.

இருப்பினும், 'சந்தோஷ்' என்ற மற்றொரு இந்தி திரைப்படம் 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இடம் பெற்றது. ஆஸ்கர் விருது போட்டியிலிருந்து 'லாபதா லேடீஸ்' வெளியேற்றப்பட்டநிலையில், நடிகர் அமீர்கானின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

''லாபதா லேடீஸ்' ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெறாதது நிச்சயமாக ஏமாற்றம்தான். ஆனால் எங்கள் படத்தைப் பரிசீலித்ததற்காக அகாடமி உறுப்பினர்கள் மற்றும் எப்.எப்.ஐ நடுவர் மன்றத்திற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் படத்திற்கு தங்கள் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்திய உலகெங்கிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது முடிவு அல்ல, முன்னேற்றம்தான். இதைவிட நல்ல கதைகளுக்கு உயிர்கொடுத்து அவற்றை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story