தரமற்ற படத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க யாருக்கும் தைரியமில்லை - நடிகை ஜோதிகா

‘கங்குவா’ படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
சென்னை,
சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான கங்குவா படத்தில், அதீத சத்தம், 3 டி காட்சிகள் , நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், 'கங்குவா' படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா கொந்தளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
'கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே நன்றாக வரவில்லை. சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன். குறை இல்லாத படத்தை எடுக்க முடியாது, ஆனால், அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் விமர்சிப்பதா?. ஊடகங்கள் மற்றும் சிலரின் எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஏனென்றால் நான் முன்பு பார்த்த பெரிய பட்ஜெட் படங்களில், பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது போன்றவற்றுக்கு எல்லாம் இந்த அளவுக்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கங்குவாவுக்கு மட்டும் ஏன்?. கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனம் வர ஆரம்பித்துவிட்டது. பல குழுக்கள் இணைந்து திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புகின்றன. விமர்சகர்கள் படத்தில் உள்ள நல்ல விஷயங்களை கவனிக்காமல் விட்டது ஏன்? ' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாலிவுட் நடிகை ராதிகா மெஹ்ரா நடிகை ஜோதிகாவின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த பதிவிற்கு நன்றி கூறிய ஜோதிகா, அத்துடன் பதில் கருத்து ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பதிவில், 'நான் படத்தின் வெற்றி, தோல்வியை பற்றி பேசவில்லை. வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ள நாங்கள் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். நேர்மையான படைப்புக்கு எதிர்மறை விமர்சனங்கள் வருகிறது. ஆனால் அதே சமயம் தரமற்ற படங்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்க யாருக்கும் தைரியமில்லை.' என்று குறிப்பிட்டுள்ளார்.