பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x
தினத்தந்தி 14 July 2022 2:37 PM IST (Updated: 21 Dec 2024 5:51 PM IST)
t-max-icont-min-icon

மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிசாசு'. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் பிசாசு 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிசாசு 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story