'பிசாசு 2' படம் மீதான இடைக்கால தடை நீட்டிப்பு


பிசாசு 2 படம் மீதான இடைக்கால தடை நீட்டிப்பு
x

மிஸ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பிசாசு'. அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது 'பிசாசு' படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஒப்பந்தப்படி, 4 கோடியே 85 லட்சம் ரூபாயில் இரண்டு கோடி ரூபாய் பாக்கி வைத்திருந்தது. இந்தத் தொகையை திருப்பிக் கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 ரூபாயும், ஜிஎஸ்டி ஆக 31 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயும் வழங்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி 'பிசாசு 2' திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு நவம்பர் 18ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.ராஜேஷ், ஏற்கனவே படத்திற்கு தடை விதிக்கபட்ட நிலையில், தற்போது மார்ச் மாதம் படம் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என தெரிவித்தார். இதனையடுத்து, பிசாசு 2 விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் எனவும், வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21 தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story