சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் - நடிகர் சூர்யா


சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான்  - நடிகர் சூர்யா
x
தினத்தந்தி 24 Oct 2024 2:30 PM IST (Updated: 24 Oct 2024 2:36 PM IST)
t-max-icont-min-icon

'கங்குவா' பட புரோமோஷனில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏ.ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினர் புதுடெல்லியில் படத்திற்கான புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

'கங்குவா' பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யாவை, நிகழ்ச்சி தொகுப்பாளர் சூப்பர் ஸ்டார் என்று அடிக்கடி அழைத்துள்ளார். அதற்கு சூர்யா, "எங்களைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் சார் மட்டுமே சூப்பர் ஸ்டார் " என்று தெரிவித்துள்ளார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது. ஜெயிலர் இசை வெளியீட்டு விழா, லியோ வெற்றி விழா என சென்ற அந்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் முடிவு கட்டினார்.

நடிகர் சூர்யா, ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துடன் போட்டி போட விரும்பாமல் 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் 10ல் இருந்து நவம்பர் 14க்கு தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story