'காதல் என்பது பொதுவுடைமை' திரைப்பட விமர்சனம்


காதல் என்பது பொதுவுடைமை திரைப்பட விமர்சனம்
x
தினத்தந்தி 15 Feb 2025 6:01 AM (Updated: 15 Feb 2025 6:13 AM)
t-max-icont-min-icon

தன்பாலின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள 'காதல் என்பது பொதுவுடைமை' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'காதல் என்பது பொதுவுடைமை'. இப்படத்தில் வினீத், ரோகினி, அனுஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லிஜோமோல் ஜோஸ் , அனுஷா பிரபு, காலேஷ் மற்றும் தீபா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். தன்பாலின சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இப்படத்தை பிரபல மலையாள இயக்குனரான ஜியோ பேபி தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

கணவர் வினீத்தை பிரிந்த ரோகிணி மகள் லிஜோமோலை முழு சுதந்திரம் கொடுத்து வளர்க்கிறார். இந்த நிலையில் தாயிடம் ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்து அவளை காதலிப்பதாகவும் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் லிஜோமோல் தெரிவிக்கிறார். அதை கேட்டு பதறும் ரோகிணி இருவரையும் சேர விடாமல் தடுக்கிறார். ஆனாலும் காதலில் உறுதியாக இருக்கிறார் லிஜோமோல்.

லிஜோமோல் ஜோஸ் தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் பாலினச் சேர்க்கை உணர்வை தனது தாய்க்கும், சமூகத்திற்கும் எப்படி புரிய வைக்கிறார், தன் பாலினச் சேர்க்கை மீதான சமூகத்தின் பார்வை, கேள்விகள், என அனைத்தையும் பற்றி அலசும் திரைப்படமே காதல் என்பது பொதுவுடைமை.

லிஜோமோல் கதாபாத்திரத்தில் தன்னை தேர்ந்த நடிகையாக வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. தன் பாலினத்தவரின் மீது மையல் கொள்ளும்போது அதை வெளிப்படுத்தும் பரவசம், இணையருக்காக நெஞ்சுரத்துடன் போராடுவது, தன் காதலின் ஆழத்தையும் புனிதத்தையும் வெளிப்படுத்த கிளைமாக்ஸ் காட்சியில் எடுக்கும் கடைசி அஸ்திரம் என படம் முழுவதும் தாண்டவமாடியுள்ளார்.

ரோகிணிக்கு இல்லத்தரசி வேடம். மகள் மீதான பாசம், ஆவேசம் கலந்த வேடத்தை நிறுத்தி நிதானமாக ஆடியிருப்பது சிறப்பு. மகள் தன் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சென்றதை அறிந்து உடைந்து நிற்கும் இடங்களில் பார்வையாளர்களின் இதயத்தை கனக்கச் செய்யுமளவுக்கு உருக வைக்கிறார்.

வினீத் காதல், தன் பாலினச் சேர்க்கை குறித்த பேதங்களை தர்க்க ரீதியாக எடுத்துரைத்து இயக்குனரின் கருத்தியலுக்கு சிறப்பு செய்கிறார். பிற வேடங்களில் வரும் தீபா, அனுஷா, காலேஷ் ஆகியோரின் நடிப்பு நிறைவு. ஒளிப்பதிவாளர் ஶ்ரீ சரவணன் கதைக் களத்தை அங்குலம் அங்குலமாக படம் பிடித்து கதைக்கு அழகுச் சேர்த்துள்ளார்.

கண்ணன் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மனதை வருடிச் செல்லுகிறது. மெதுவாக நகரும் திரைக்கதை, மனைவியின் பிரிவுக்கு வினீத் சொல்லும் காரணம் பலவீனம். காதல் சிந்தனைகள் எவ்வாறு நவீனமாக மாறியுள்ளது என்பதை யதார்த்தமாக சொல்லி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.


Next Story