சாதியை மையப்படுத்திய கதைகளை படமாக எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - இயக்குனர் கவுதம் மேனன்

இன்றைய சூழலில் யாருக்கும் சாதியை மையப்படுத்தும் கதை தேவையில்லை என கவுதம் மேனன் பேசியுள்ளார்.
சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் 'டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்' திரைப்படம் கடந்த 23ம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட கவுதம் மேனன் சாதிய பிரச்சனைகளை மையப்படுத்து எடுக்கப்படும் படங்களைப் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
'நான் படங்களின் பெயர் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இன்றைய சூழலில் சாதி இல்லை என்று தெரிந்தும் அதை மையப்படுத்திய கதைகளை படமாக எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்றைய சூழலில் இந்த மாதிரி படங்களை எடுக்க முடியாது என்பதால் 1980 , 90 களில் நடந்ததாக இந்த படங்களை எடுக்கிறார்கள். இந்த கதைகள் எல்லாம் சொல்லப்பட வேண்டியதில்லை என்று எனக்கு தோன்றுகிறது. அதே மாதிரியான ஒரு கதையை இன்று நம்மால் சொல்ல முடியாது. யாருக்கும் அந்த மாதிரியான கதை தேவையில்லை' என கவுதம் மேனன் பேசியுள்ளார்.
அவரது இந்த கருத்தை பலர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள். மேலும் சாதியை வைத்து படம் எடுக்கிறார்கள் என கவுதம் மேனன் இயக்குநர் பா ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியவர்களின் படங்களை குறிப்பிட்டு சொல்கிறார் என பலர் சுட்டிகாட்டியுள்ளார்கள்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.